டிஜிபி அலுவலகத்தில் எஸ்ஐ உட்பட 10 போலீசுக்கு கொரோனா புழல் சிறையில் 30 கைதிகளுக்கு தொற்று

சென்னை: டிஜிபி அலுவலகத்தில் க்யூ பிரிவு உதவி ஆய்வாளர் உட்பட மாநகர காவல் துறையில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதேபோல், புழல் மத்திய சிறையில் 30 தண்டனை கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இயங்கி வரும் க்யூ பிரிவில் உதவி ஆய்வாளர் உட்பட 4 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், சென்னை மாநகர காவல் துறையில் 6 காவலர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனா பாதித்த 12 போலீசாரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், உடன் பணியாற்றிய சக காவலர்களையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். நேற்று வரை டிஜிபி அலுவலகத்தில் உளவு பிரிவு டிஎஸ்பி உட்பட மொத்தம் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.

சென்னை மாநகர காவல் துறையில் நேற்று வரை 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 101 பேர் குணமடைந்துள்ளனர். வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ர். மாநகர காவல் துறையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே புழல் மத்திய சிறையில் நேற்று முன்தினம் காய்ச்சல் காரணமாக 90 தண்டனை  கைதிகளுக்கு மாதவரம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையிலான குழு பிசிஆர் பரிசோதனை செய்தனர். அதில் நேற்று 30 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories: