சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நுழைந்த ஒற்றை கொம்பு யானை: சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்

கோவை:  கோவை சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நுழைவு வாயிலில் இருந்த கேட்டை உடைத்து கொண்டு ஒற்றை கொம்பு யானை ஒன்று சுத்திகரிப்பு நிலையத்திற்குள் நுழைந்தது. மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய போளூவாம்பட்டி வனச்சரகத்தில் யானை, காட்டுமாடு, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் உணவுக்காக வனத்தில் இருந்து வெளியேறி அருகேயுள்ள வனகிராமங்களில் நுழைந்து அங்குள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்கின்றன. இதில், சாடிவயல் அடுத்த  மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் சுற்றி திரிவது வழக்கம்.

சாடிவயல் பகுதியில் சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவுத் தேடி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நுழைவு வாயில் முன்பு வந்த ஆண் யானை ஒன்று அங்கிருந்த இரும்பு கேட்டை உடைத்து சுத்திகரிப்பு நிலையத்திற்குள் நுழைந்தது. இந்த யானை வருவதை பார்த்த ஊழியர்கள் யாைனயை செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வைரலாகியுள்ளது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், “இந்த யானைக்கு ஒரு தந்தம்தான் இருக்கும். இதனால், இதை ஒற்றை கொம்பு யானை என அழைக்கிறோம். இப்பகுதியில் அடிக்கடி வரும். சாடிவயல் கும்கி முகாமில் புகுந்து கும்கி யானைகளுடன் சில நேரங்களில் சண்டையிடும். இதனை அடர்ந்த வனத்திற்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Stories: