கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற விவகாரம் : செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்

சென்னை: கரூர் மாவட்ட  கலெக்டரை சந்திக்க சென்றபோது நடந்த பிரச்னை தொடர்பாக அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு செந்தில்பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு  நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், என்.பரணிக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘எம்.எல்.ஏ. நிதியை பயன்படுத்த கோரி கலெக்டரிடம் மனுதாரர் மனு கொடுத்துள்ளார்.  அப்போது, ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க தனக்கும் அழைப்பு விடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், மிரட்டல் விடுத்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயல்’ என்று வாதிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி முன் 2 வாரங்கள் ஆஜராக வேண்டும். கலெக்டர் தொடர்பாக பேசக்கூடாது. அவர் தாமாக முன்வந்து கூறியதை போல்  அடையாறு கேன்சர் மையத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை தர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: