ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தடைந்தது

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், தமிழக எல்லையான ஜீரோ பாயின்டை வந்தடைந்தது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா - தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி  தண்ணீர் வழங்க வேண்டும். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஆந்திர அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காததால்,  இந்த தவணை காலத்தில் தண்ணீர் திறக்க கோரி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். ஆனால், கண்டலேறுவில் போதிய அளவு  தண்ணீர் இல்லை என  கூறி தண்ணீர் திறக்க ஆந்திர அரசு  மறுத்து விட்டது.

இந்நிலையில், தென்மேற்கு பரும மழை தாக்கம் காரணமாக ஆந்திராவில் பரவலாக மழை பெய்தது. இதனால், ஆந்திர அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து, தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து சோமசீலா வழியாக கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு  அணையில் 13 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது.  ஆனால், இந்த அணையில் 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு  திறந்து விடலாம் அதன்படி கண்டலேறு அணையில் கடந்த வருடம்  செப்டம்பர் மாதம் 25ம் தேதி திறக்கப்பட்டது. இதனால், ஆந்திர அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய 8 டிஎம்சி தண்ணீருக்கு பதில் 7.5 டிஎம்சி தண்ணீர் தந்தது.

இந்நிலையில், மீதமுள்ள அரை டிஎம்சி தண்ணீரையும் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஆந்திர அரசிடம் மீண்டும் கோரிக்கை வைத்தது. அதன்பேரில், ஆந்திர அரசு கடந்த 25ம் தேதி 500 கனஅடி வீதம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் 1200 கன அடியாக திறக்கப்பட்டது.  இந்த தண்ணீர் 152 கி.மீ. கடந்து 4 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு 8.40 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டை வந்தடைந்தது.

இந்த தண்ணீரை தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மரிய ஹென்றி ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர் சண்முக சுந்தரம், உதவி பொறியாளர்கள் பிரதீப், பழனிகுமார் மற்றும் ஆந்திர அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

Related Stories: