மனித உரிமை ஆணைய ஊழியருக்கு கொரோனா

சென்னை: சென்னையில் கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் செய்தாலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் சென்னை, கிரீன்வேஸ் சாலையில் மாநில மனித உரிமை ஆணைய அலுவலகம் அமைந்துள்ளது.  இந்த ஆணையத்தில் தமிழகத்தில் உள்ள காவல்நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற  இடங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள் மற்றும்  பத்திரிகைகளில் வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான செய்திகளை தானாக  முன்வந்து விசாரணை செய்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க அந்த துறையை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை  செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து மனித உரிமை ஆணைய அலுவலகத்திற்கு தினமும்  100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து கொண்டுள்ளது.

இந்த அலுவலகத்தில் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க ஊழியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் அவர் சோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்திருந்தார். அந்த சோதனை முடிவுகள் நேற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மேலும், அவர் வசித்து வந்த பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள்  என அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவருடன் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அரசு சார்பில் கொரோனா பரிசோதனை செய்தால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் தங்களுக்கும் கொரோனா வைரஸ் இருக்குமோ என்று பயத்தில் தான் வேலை செய்ய வேண்டியிருக்கும். எனவே சுகாதாரத்துறை சார்பில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் சோதனை செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர். இச்சம்பவத்தால் உடன்பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்தில் பணிபுரிந்து வருவதாக கூறுகின்றனர்.

Related Stories: