கொத்தடிமை தொழிலாளர்கள் 5 பேர் மீட்பு

மதுரை: மதுரை அருகே அச்சம்பத்து பகுதியில் ஆழ்குழாய் துளையிடும் தொழிலில் ஈடுபட்டிருந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 2 குழந்தை தொழிலாளர்கள் உட்பட 5 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மதுரை அச்சம்பத்து பகுதியில் ஆழ் குழாய் துளையிடும் பணி கடந்த 5 நாட்களாக இரவு பகலாக நடந்து வருகிறது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒன்பது மாதங்களாக எந்தவித சம்பளமும் தராமல், நிர்வாகி வேலை வாங்கி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரில் மக்கள் கண்காணிப்பகம் மற்றும் ஐடியாஸ்  மனித உரிமை அமைப்பினர் இங்கு நேற்று திடீர் ஆய்வு செய்தனர். இதில் 2 குழந்தை தொழிலாளர்கள் உள்பட 5 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து வக்கீல் ஒருவர் கூறும்போது, ‘எங்களுக்கு வந்த புகாரின்பேரில், உரிய இடத்திற்கு சென்று நேரடி ஆய்வு செய்தோம். கலெக்டர், தென்மண்டல ஐஜி உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கும் புகார் தெரிவித்தோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே, இவர்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. ஊரடங்கு காலத்திலும் இவர்களிடம் வேலை வாங்கியுள்ளனர். வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்குப் பிறகு, மீட்கப்பட்ட இந்த தொழிலாளர்கள் சுரேஷ்குமார் (20), பஜ்ரங்(19), கரன் லால்(20) மற்றும் 17 வயதுடைய 2 பேர் என 5 பேரும் உரிய நிவாரணத்தை பெற்றுத்தந்து, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்’ என்றார்.

Related Stories: