31ம் தேதி ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை: முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்க திட்டம்

* தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய  இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், நாளை மாவட்ட கலெக்டர்களுடன்  நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம்

வாய்ந்ததாக கருதப்படுகிறது

சென்னை:  தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை சுமார் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக சென்னையில் தினசரி 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிரிழப்பும் 130ஐ தாண்டி விட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் 4வது கட்ட ஊரடங்கு வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. ஒவ்வொரு முறையும், ஊரடங்கு நீட்டிக்கப்படும்போது, பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோகான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துவார். பின்னர் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

ஆனால், இந்தமுறை ஊரடங்கு நீட்டிப்பதை அந்தந்த மாநில முதல்வர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோன்று, தமிழக முதல்வரும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், அமைச்சரவை கூட்டம், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். இந்த கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவின் படியே, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது.

தற்போது வருகிற 31ம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ளதால், நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் 19 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது, “தமிழகத்தில் ஊரடங்கு தொடர வேண்டும். கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில்  பேருந்து, ரயில், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க கூடாது. கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகள், சிகிச்சை முறைகள் குறித்து அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைகளை வழங்கினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், நாளை மாவட்ட கலெக்டர்களுடன்நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ்பரவலை தடுக்க புதிய ஆலோசனைகளை அரசுக்கு மாவட்ட கலெக்டர்கள் வழங்குவார்கள். மேலும், ஊரடங்கில் புதிய தளர்வுகளையும் அறிவிக்க வேண்டும் என்றும், நோய் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் மாவட்ட கலெக்டர்கள் வலியுறுத்துவர்.

அதேநேரம், நோய் பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் பேருந்து மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மருத்துவ நிபுணர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 5வது கட்ட ஊரடங்கை அறிவிப்பது மற்றும் ஊரடங்கில் புதிய தளர்வுகள் என்னென்ன என்பது குறித்து வருகிற 30 அல்லது 31ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

Related Stories: