பொதுத்தேர்வு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது

சென்னை: பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் 2ம் ஆண்டு பொதுத் தேர்வு பணிகளை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் நேற்று அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கல்வித்துறை, வருவாய்த் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை என அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், தேர்வுளுக்கான அனைத்து முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல பேருந்து வசதிகள் செய்திடவும் தெரிவிக்கப்பட்டது.

 ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுகாதார கண்காணிப்பு குழுக்கள் மூலம் ஜூன் 2ம் வாரம் 8ம்தேதி முதல் அனைத்துப் பள்ளிகளிலும் கிருமி நாசினி கொண்டு பள்ளி வளாகம், வகுப்பறை மற்றும் கழிப்பறை ஆகிய இடங்களில் தெளிக்கவும், தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு தொடங்கும் முன்பு காலை கிருமி நாசினி தெளித்திடவும், தேர்வு முடிந்த பின்பு கிருமி நாசினி தெளிக்கவும்  அறிவுறுத்தப்பட்டது.   மேலும், ஒவ்வொரு தேர்வு மையத்திலும் சோப்பு மற்றும் கிருமி நாசினியை கொண்டு கை கழுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டிப்பாக முககவசம் அணிவதை வலியுறுத்தியும், போதிய சமூக இடைவெளிவிட்டு மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

 சென்னை மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான 161 மையங்களும்,  முதலாம் ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான 412 தேர்வு மையங்களும் இடைநிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான 577 தேர்வு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. தேர்வு மையங்களில் தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தலை அறிவுறுத்த காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். தேர்வுப் பணியில் ஈடுபடும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: