இரவு பகலாக ஓய்வின்றி கொரோனா கண்காணிப்பு பணி மன உளைச்சலில் தவிக்கும் நுண்ணறிவு பிரிவு போலீசார்

பெரம்பூர்: சென்னையில் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும்  ஒரு நுண்ணறிவு பிரிவு போலீசார் வீதம் 350க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், அந்தந்த காவல் நிலையங்களில் நடக்கும் முக்கிய சம்பவங்கள், கொலை, கொள்ளை, அரசியல்வாதிகளின் செயல்பாடுகள்,  ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்தை முன்கூட்டியே தெரிவிப்பது, பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களின்  வீட்டுக்கே சென்று அவர்கள் அந்த முகவரியில் உள்ளார்களா என்பதை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளைசெய்து வந்தனர்.  இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து இவர்களின் அனைத்து பணிகளும் முடங்கி உள்ளது.

காரணம்,   ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் உட்பட்ட பகுதியில் யாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதோ அவரது வீட்டிற்கு சென்று, அவர்களது முழு விவரத்தை சேகரித்து, அவருடன் கடைசியாக யார் பழகினர் என்ற விவரங்களை சேகரித்து அதை சுகாதாரத்துறைக்கு அனுப்பும் பணியில் தற்போது நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.  மேலும், மருத்துவமனையிலிருந்து திரும்பியவர்களை கண்காணிப்பது, மக்கள் கூட்டம் கூடும் இடங்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத மார்க்கெட் பகுதிகள்  உள்ளிட்டவற்றை கண்காணித்து அதை சுகாதாரத்துறைக்கு தெரிவிப்பது போன்ற பல வேலைகளை செய்து வருகின்றனர்.

இவர்கள், கொரோனா வைரஸ் தொற்று  ஆரம்பித்ததிலிருந்து காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை தொடர்ந்து வேலை செய்து வருவதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.   இதுகுறித்து பெயர் கூற விரும்பாத நுண்ணறிவு பிரிவு போலீசார் கூறுகையில், ‘‘ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வாரத்தில் 2  நாட்கள் விடுமுறை தரப்படுகிறது. இன்ஸ்பெக்டருக்கு வாரத்தில் 2 நாள் விடுமுறை தரப்படுகிறது. இவ்வாறு சுழற்சி முறையில் காவலர்களுக்கும் ஓய்வு தரப்பட்டு வருகிறது.

8 மணி நேர வேலை முடிந்தவுடன் ஒவ்வொரு போலீசும் வீட்டுக்கு சென்று விடுகின்றனர். ஆனால் நுண்ணறிவு பிரிவு போலீசார் காலை 5 மணிக்கு கொரோனா  பட்டியலை பார்த்து அந்தந்த இடத்திற்கு நேரில் சென்று விவரங்களை சேகரிக்க வேண்டியுள்ளது. தொடர்ந்து வேலை இருப்பதால் இரவு 12 மணி அளவில் தான் வீட்டிற்கு செல்ல முடிகிறது. ஓய்வின்றி வேலை செய்வதால் மன உளைச்சலில் உள்ளோம்,’’ என்றனர்.

Related Stories: