துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் திடீர் அனுமதி: முதல்வர் எடப்பாடி நேரில் நலம் விசாரித்தார்

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று துணை முதல்வரை சந்தித்து, உடல்நலம் விசாரித்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் மாலை இருந்தபோது திடீரென நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக சென்னை, சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனை செய்யப்பட்டதுடன், ஆஞ்ஜியோ பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில் அவருக்கு இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் லேசான அடைப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று காலை ஆஞ்ஜியோ பிளாஸ்ட் சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் முழு நலமுடன் உள்ளார்.

துணை முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் நேற்று காலை முதல் மதியம் வரை மருத்துவமனையிலே இருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகிச்சை முடிந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று மதியம் 12.30 மணிக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று, துணை முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து உடல் நலம் விசாரித்தார்.

இதுகுறித்து, சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு டாக்டர்கள் 25ம் தேதி (நேற்று) முழு உடல் பரிசோதனை செய்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் அவரது மருத்துவ அளவீடுகள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருந்தது. நேற்று (25ம் தேதி) மாலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: