வெயில்ல யாரும் வர்றதில்லை... 7 மணிக்கு மேல போலீஸ் கெடுபிடி... கடைகளை இரவு 9 மணிவரை திறந்தா வியாபாரம் கொஞ்சம் கைகொடுக்கும்

*  அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் அத்தியாவசிய கடைகளை இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை, மருந்து கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், கடந்த 4ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 34 வகையான தனி கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க தற்போது அனுமதி உள்ளது. அதே நேரம் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனி கடைகள் திறக்கப்பட்டாலும் பொதுமக்கள் கடைகளுக்கு முன்பு போல வருவது இல்லை. அதனால் வியாபாரம் இல்லை என்று வியாபாரிகள் கூறி வருகிறார்கள். அத்தியாவசிய கடைகள் மற்றும் தனி கடைகளை இரவு 9 மணி திறந்திருக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “வழக்கமாக பொதுமக்கள் அலுவலக வேலை முடிந்து இரவு 7 மணிக்கு மேல்தான் வீடு திரும்புவார்கள். இப்படி வீட்டுக்கு திரும்பும்போதுதான் கடைகளில் பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம்.

தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக, பலர் கடந்த 4ம் தேதி முதல் வேலைக்கு செல்கிறார்கள். இவர்களுக்கு சரியான பஸ் வசதி இல்லாததால் இரவு 7 மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வரும் நிலை உள்ளது. அந்த நேரம் அனைத்து கடைகளும் மூடப்பட்டு விடுகிறது. இரவு 7 மணிக்கு மேல் கடைகளை திறந்தால் போலீசார் அபராதம் விதிக்கிறார்கள். இதனால் எங்களுக்கு வியாபாரம் இல்லை. மேலும், அதிக வெயில் காரணமாக பெண்களும் மாலை வரை வெளியே வருவது இல்லை. அதனால் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். அப்படி அனுமதி அளித்தால் கடைகளில் கொஞ்சம் வியாபாரம் அதிகரிக்கும்” என்றனர்.

Related Stories: