உள்நாட்டு விமான சேவை எப்போது? உறுதி இல்லாத அரசு கோரிக்கை

* விமான பயணிகள் குழப்பம்

* ஜுன் வரை விமானசேவைகள் ரத்து செய்யப்பட்டால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டு, ஒராண்டிற்குள் மாற்று தேதியில் பயணம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படலாம்.

சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழக விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்குவது மே 25 அல்லது ஜுன் முதல் வாரமா என பயணிகள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர்.  கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் 2 மாதங்களாக உள்நாடு மற்றும் சர்வதேச பயணிகள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அரசு வரும் 25ம் தேதியிலிருந்து குறைந்த அளவில் உள்நாட்டு விமான இயக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் தமிழக அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் குறைந்தபட்சம் மே மாதம் இறுதி வரையிலாவது சென்னைக்கு விமானங்களை இயக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில் அரசு துறை பொது நிறுவனமான ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் நாடுமுழுவதும் வரும் 25ம் தேதியிலிருந்து இயக்கப்போகும் 64 வழித்தடங்களுக்கான உள்நாட்டு விமான சேவைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை உள்ளிட்ட தமிழகத்திற்கு எந்த விமான சேவைகளும் இடம் பெறவில்லை.இதற்கிடையே தனியார் விமான நிறுவனங்கள் வரும் 25ம் தேதியிலிருந்து உள்நாட்டு விமான சேவைகளுக்கான டிக்கெட் முன்பதிவை ஆன்லைனில் தொடங்கியுள்ளன. சென்னையிலிருந்து டில்லி, மும்பை, கொச்சி, மதுரை, கோவை ஆகிய பகுதிகளுக்கு செல்ல டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

 சென்னையிலிருந்து டெல்லிக்கு குறைந்தது 7,610/லிருந்து 19,930 வரை அடிப்படை கட்டணங்களாக வசூலிக்கப்படுகிறது. வரிகள், ஜிஎஸ்டி தனியாக வசூலிக்கப்படுகிறது.

சென்னை- மதுரை 4,984/லிருந்து 6184/வரை வரிகள், ஜிஎஸ்டி தனி. சென்னை-கோவை 4,460/லிருந்து 5,658/ வரை. வரிகள், ஜிஎஸ்டி தனி. சென்னை-மும்பை 7,030/லிருந்து 14,485/வரை. வரிகள்,ஜிஎஸ்டி தனி. இந்த கட்டணம் அனைத்தும் சாதாரண வகுப்புகளுக்கான கட்டணங்கள், உயர் வகுப்புகளுக்கு இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே மாநில அரசு விமானங்கள் இயக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தனியார் விமான நிறுவனங்கள் சென்னையிலிருந்து உள்நாட்டு விமான சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் புக்கிங்கை தொடங்கியுள்ளது.

பயணிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மே 17ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், கடந்த 18ம் தேதியிலிருந்து பயணம் செய்வதற்கான உள்நாட்டு பயண டிக்கெட்களை தனியார் விமான நிறுவனங்கள் தொடங்கின. அதன்பின்பு ஊரடங்கு நீடிக்கப்பட்டதால், முன்பதிவு டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டு, அடுத்த ஒரு ஆண்டிற்குள் மாற்றுதேதியில் பயணம் செய்து கொள்ளலாம் என்று தனியார் விமான நிறுவனங்கள் அறிவித்தன. அதைப்போல் தற்போதும் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் ஜுன் வரை விமானசேவைகள் ரத்து செய்யப்பட்டால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஏற்கனவே அறிவித்தப்படி, டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டு, ஒராண்டிற்குள் மாற்று தேதியில் பயணம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் சென்னை உள்ளிட்ட தமிழக விமான பயணிகள் பெரும் குழப்பமடைந்துள்ளனா்.தனியார் விமான நிறுவனங்கள் அவசரஅவசரமாக இம்மாதம் 25ம் தேதியிலிருந்து சென்னை உள்ளிட்டதமிழக நகரங்களிலிருந்து உள்நாட்டு விமான பயணம் செய்ய ஆன்லைன் டிக்கெட்கள் முன்பதிவு செய்துள்ளது இந்த குழப்பத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

Related Stories: