கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு அலுவலர் எச்சரிக்கை

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து, தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளில் தினமும் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு பொது சுகாதார துறையினரின் அலட்சியமே காரணம் என பல்வேறு தரப்புகளில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது. நோய் தடுப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சி துறை, காவல் துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை ஆகியோர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மற்ற துறைகளை விட சுகாதாரத்துறை இந்த நடவடிக்கைகளில் முறையாக ஈடுபடாமல் அலட்சிய போக்குடன் செயல்படுவதுடன், துறை ஊழியர்களின் கோரிக்கைகளையும் அலட்சியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய நேரத்தில் அனுப்பாமல் தாமதம் செய்தது, வைரஸ் அறிகுறி இருப்பவர்களை நன்றாக இருப்பதாக கூறி மீண்டும் வீட்டுக்கு அனுப்பியது, இவ்வாறு அனுப்பியவர்களில் பலர் வெளியே சுற்றித் திரிந்தது உள்ளிட்ட காரணங்களால் நோய் தொற்று அதிகரித்ததாக கூறப்படுகிறது.  அதுமட்டுமின்றி, வைரஸ் டெஸ்ட் கிட் இல்லையென கூறி தர மறுப்பது, கடந்த 11ம் தேதி முதல் எந்த பகுதிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய பரிசோதனை வாகனங்களை அனுப்பாமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களால் தான் செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்க காரணம் என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் முதன்மை செயலரும், செங்கல்பட்டு மாவட்ட கொரோனா ஒழிப்பு பணிகள் கண்காணிப்பு அலுவலருமான உதயசந்திரன் தலைமையில், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட பொது சுகாதாரத் துறையினர் நோய் பரவலை கட்டுப்படுத்த முறையாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்தது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளை உதயசந்திரன் எச்சரித்துள்ளார்.தொடர்ந்து இதே நிலை நீடித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Related Stories: