கோயம்பேட்டுக்கு மாற்றாக திருமழிசையில் புதிய பேருந்து நிலையம்: திட்டம், வடிவமைப்பு குறித்து துணை முதல்வர் ஆலோசனை

சென்னை: திருமழிசையில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்தின் திட்டம் மற்றும் வடிவமைப்பு குறித்து துணை முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை, கோயம்பேடு புறநகர் பஸ் நிலைய நெரிசலுக்கு தீர்வாக, மாதவரம், வண்டலூர், பூந்தமல்லி பகுதிகளில் புதிய புறநகர் பஸ் நிலையங்கள் அமைக்க, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டு உள்ளது. இதில், மாதவரம் பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வண்டலூர் - கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கான கட்டுமான பணிகள் துவங்கி உள்ளன.

பூந்தமல்லியில் அமைய இருந்த, புறநகர் பஸ் நிலையம், திருமழிசை - குத்தம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.

திருமழிசை துணை நகரத்திற்காக, வீட்டு வசதி வாரியம் தேர்வு செய்த நிலத்தில், 20 ஏக்கரில் பஸ் நிலையம் அமைக்க, தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கான நிறுவனங்களை, தேர்வு செய்யும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை பெருநகர வளர்ச்சி குழும கூட்டரங்கில் சென்னை திருமழிசையில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து முனையத்திற்கான திட்டம் மற்றும் வடிவமைப்பு குறித்த திட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சி.ஆர்.நாராயண ராவ் (கன்சல்டன்ட்ஸ்) பிரைவேட் லிமிடெட் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேருந்து முனைய பணிகளை துவங்குவதற்கான ஆயத்த பணிகளை துரிதப்படுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் முருகேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: