பத்திரிகை துறையின் கோரிக்கைகள் வெற்றி பெற தமிழக காங்கிரஸ் ஆதரவளிக்கும்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: பத்திரிகை துறையின் கோரிக்கைகள் வெற்றி பெற தமிழக காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.  பத்திரிகை துறைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை ‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம், தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் ஆகியோர் நேற்று சத்தியமூர்த்தி பவனில் சந்தித்தனர். காங்கிரஸ் எம்பிக்கள் வசந்தகுமார், செல்லக்குமார், ஜெயக்குமார், ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, வக்கீல் செல்வம் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக செய்திதாள் நிறுவனங்களின் நிர்வாகிகள் எங்களை சந்தித்தனர். அவர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை இந்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அது சம்பந்தமாக தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும், எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவையும் கேட்டிருக்கிறார்கள். இதுசம்பந்தமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் கலந்து பேசுவோம். ஏனென்றால் இது ஒரு தேசிய பிரச்னை. மாநில பிரச்னை மட்டும் அல்ல.

இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில், செய்திதாள் என்கிற  தூணும் மிக முக்கியமான ஒரு தூண். இவர்களின் ேகாரிக்கைகள் எளிதில் வெற்றி பெற, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  ஒப்புதலையும் பெற்று அவர்களுக்கு தர வேண்டிய ஆதரவையும் தருவதென்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். அது சம்பந்தமாக எங்கள் கட்சி தலைவர்களுடன் நாங்கள் பேச உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: