கொரோனா ஊரடங்கால் பாராமுகம் கோடையில் தூர்வாரப்படாமல் கிடக்கும் வறண்ட நீர் நிலைகள்: பருவமழைக்கு முன்பே பணிகளுக்கு வலியுறுத்தல்

சேலம்:  கோடையில் வறண்டு கிடக்கும் நீர்நிலைகள் கொரோனா ஊரடங்கால் நடப்பாண்டு தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனை பருவமழைக்கு முன்பே தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும்  கோடை காலத்தில் வறண்ட நீர்நிலைகள், அரசு சார்பில் தூர்வாரப்பட்டு சீரமைப்பது வழக்கமாக உள்ளது. இதற்கடுத்து வரும் பருவமழை நீரை தேக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு நீர்நிலைகள் தூர்வாரப்படுகிறது. ஆனால் நடப்பாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த பணிகள் முடங்கியுள்ளது. இந்த வகையில் சேலம் மாவட்டத்தில் குமரகிரி ஏரி, மூக்கனேரி, புதுஏரி, போடிநாயக்கன்பட்டி ஏரி, குருவிபனை ஏரி, எருமாபாளையம் ஏரி, சீலாவரி ஏரி, அம்பாள் ஏரி, பனமரத்துப்பட்டி ஏரி, பசுவந்தாம்பட்டி ஏரி என்று நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் வறண்டு கிடக்கிறது. நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் பெரும்பாலான ஏரிகள் வறண்டு கிடக்கிறது. இந்த ஏரிகளை தூர் வாரும் பணிகளும்  கொரோனா வைரஸ் ஊரடங்கால் முடங்கியது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், எதிர்வரும் தென்மேற்கு பருவமழையை கருத்தில் கொண்டு ஏரிகளை தூர்வார போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த வேளாண் ஆர்வலர்கள் கூறியதாவது: ஏற்காடு மலைப்பகுதியில் வழிந்தோடும் மழைநீரானது அடிவாரத்தில் உள்ள புதுஏரிக்கு வருகின்றன. ஜருகுமலையில் பெய்யும் மழைநீரானது கந்தாஸ்ரமம் வழியாக அம்மாப்பேட்டை காமராஜர் நகர் காலனி, ராமநாபுரம் வழியாக குமரகிரி ஏரியில் கலக்கின்றன. நாமமலையில் பெய்யும் மழைநீரானது நாமலை அடிவாரத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக குமரகிரி ஏரியில் கலக்கின்றன. இதுபோன்று பல ஏரிகளுக்கு மழைகளில் நீர் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஏரி, குளம், குட்டைகளுக்கு வரும் நீர்வழிப்பாதையில் ஏராளமான ஆக்ரமிப்புகள் உள்ளது. அதோடு கோடையில் தூர்வாரும் பணிகளும் நடப்பாண்டில் இதுவரை தொடங்கவில்லை.

இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ெதன் மேற்கு பருவமழை தொடங்குகிறது.

தென்மேற்கு பருவமழையை  பொருத்தமட்டில் உள்மாவட்டங்ளில் தான் அதிகளவில் மழைபொழிவை தரும். இந்த மழைதான் உள் மாவட்ட விவசாயிகளுக்கு பலன் தரும். தென்மேற்கு பருவமழை தொடங்கு இன்னும் பல நாட்கள் உள்ளன. அதற்குள் ஏரி, குளம், குட்டைகளுக்கு வரும் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். அப்போது தான் எதிர்வரும் பருவமழை மூலம் கிடைக்கும் நீரை சேமிக்க முடியும். இல்லை என்றால் நீர்பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயப்பணிகள் கடுமையாக பாதிக்கும். பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி பாரபட்சமின்றி நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: