கொரோனா கணக்கெடுப்பதாக கூறி வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் பறிப்பு: மர்ம கும்பலுக்கு வலை

பெரம்பூர்: சென்னை மகாகவி பாரதி நகர் 17வது மேற்கு குறுக்குத்தெருவை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி செல்வி (48). நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்தபோது இரண்டு நபர்கள் அவரது வீட்டுக் கதவைத் தட்டி கொரோனா வைரஸ் குறித்து கணக்கெடுப்பு எடுக்க வந்துள்ளோம். வீட்டில் யாருக்காவது காய்ச்சல் உள்ளதா என கேட்டனர்.

மேலும், செல்வியிடம் பேச்சு கொடுக்க வீட்டிற்குள் சென்ற அவர்கள் திடீரென்று வீட்டில் கதவை சாத்திவிட்டு கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் செல்வி கூச்சலிட்டவாறே அவர்களைக் கீழே தள்ளி விட்டு வெளியே ஓடி வந்தார். அப்போது, வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்த மேலும் 2 பேர் வீட்டிற்குள் சென்று செல்வியின் மகள் பிரதீஷா (30) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 4 சவரன் தாலி சரடு, ஒரு மோதிரம், வீட்டிலிருந்த 5 செல்போன்கள் மற்றும் 8,000த்தை எடுத்துக்கொண்டு வெளியே வர முயற்சித்தனர்.

அப்போது, கூச்சல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த வனரோஜா (43) என்பவர் செல்வி வீட்டிற்குச் சென்று என்ன நடந்தது என கேட்டார். அப்போது அங்கிருந்த கொள்ளையர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 தங்க மோதிரங்களை பறித்தனர். அதற்குள் கூட்டம் சேர வீட்டின் பின்புறமாக சுவர் ஏறி குதித்து நான்கு திருடர்களும் தப்பி ஓடினர். இதுகுறித்து, எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.   

3 சவரன் கொள்ளை

அண்ணா சாலை பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குமார் (38). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர்  வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 சவரன் நகை, 30 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: