குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி நுழையும் ‘படையப்பா’ யானையால் ‘பக்..பக்’: மூணாறில் பரபரப்பு

மூணாறு: மூணாறில் உள்ள சாலைகளில் நேற்று அதிகாலை காட்டு யானைகள் உலா வந்தன. காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான கேரள மாநிலம், மூணாறை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. கொரோனா ஊரடங்கால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டதுடன், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இதனால் கடந்த 50 நாட்களாக மூணாறு வெறிச்சோடி கிடக்கிறது. இரவு நேரங்களில் அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் மூணாறு மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் அடிக்கடி நுழைந்து விடுகின்றன.கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூணாறு அருகே அடிமாலியை சேர்ந்த பிரின்ஸ்(45), நேற்று முன்தினம் சாந்தம்பாறை அருகே சுந்தல் பகுதியை சேர்ந்த டென்னிஸ்(38) யானை தாக்கியதில் படுகாயமடைந்தனர். கடந்த சில தினங்களாக ‘படையப்பா’ என்று அழைக்கப்படும் ஆண் யானை, இரவு நேரங்களில் மூணாறு நகருக்குள் அடிக்கடி வலம் வருகிறது.

நேற்று அதிகாலை 4 மணியளவில் தனது ஜோடியுடன் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய படையப்பா யானை, நகரில் மாட்டுப்பாட்டி சாலை, காலனி சாலை, நல்லதண்ணி எஸ்டேட் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் வலம் வந்தது. பின்னர் நகர் மத்தியில் உள்ள காய்கறி கடைகளை உடைத்து அங்குள்ள காய்கறிகளை சாப்பிட முயன்றது. அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பி யானைகளை அங்கிருந்து விரட்டினர். இதனையடுத்து அருகில் உள்ள காட்டுக்குள் யானைகள் சென்றன. நகர் மற்றும் சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: