கொரோனா ஊரடங்கால் ஓட்டல், கையேந்தி பவனில் வாடிக்கையாளர் குறைந்தாலும் இட்லி, தோசை, பூரி விலை அதிரடி உயர்வு

* இழப்பை ஈடுகட்ட வியாபாரிகள் தந்திரம்: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

சென்னை: கொரோனா ஊரடங்கால் சிறிய வகை ஓட்டல், கையேந்தி பவனில் இட்லி, தோசை,  மதியத்துக்கான கலவை உணவு உள்பட பல உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24ம் ேததி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஓட்டல்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது சிறு ஓட்டல்கள், மெஸ், கையேந்தி பவன்கள் தான் இன்றைக்கு சென்னையில் வேலை, படிப்பு, கூலித் தொழில்களை செய்து வருவோரின் முக்கிய உணவு மையமாக மாறி உள்ளது. அங்கும் உணவுகள் பார்சலில் மட்டுமே வழங்கப்படுகிறது.

அந்த ஓட்டல்களில் வகை வகையான டிபன், மதிய உணவு தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதில் தற்போது காலையில் இட்லி, தோசை, பொங்கல், பூரி மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மதியம் வைரட்டி ரைஸ், இரவில் மறுபடியும் தோசை, இட்லி மட்டுமே விற்கப்படுகிறது. திறந்திருக்கும் ஓட்டல்களில் சில ஊரடங்கால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் உணவு பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளனர். இவர்கள் தான் இப்படி என்றால் சிறிய வகை ஓட்டல்கள், கையேந்தி பவன்களில் உணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வகை இடங்களில் ஊரடங்கிற்கு முன்பு ஒரு இட்லி 6, 8 என்று விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது தற்போது 10, 12 என்று விற்பனை ெசய்யப்படுகிறது. கல்தோசை 10க்கு விற்கப்பட்டது, தற்போது 15க்கு விற்கப்படுகிறது. ஸ்பெஷல் தோசை 25லிருந்து 30, இதே போல வடை 6லிருந்து 10க்கும், பரோட்டோ 10லிருந்து 15 என்றும் விற்பனை ெசய்யப்பட்டு வருகிறது. பொங்கல் 20லிருந்து 25, 30, பூரி 10லிருந்து 15 என்று உயர்த்தி உள்ளனர். பூரிக்கு உருளைக்கிழங்கு வைத்தால் ஒரு ரேட் என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல சில சிறிய டீக்கடைகளில் டீ 8, 10 என்று விற்கப்பட்டது. இது தற்போது 10, 12 என்று விற்பனை ெசய்யப்படுகிறது. அதே போல காபி 10லிருந்து 12, 15 என்று விலை உயர்ந்துள்ளது.

தற்போது உணவு தயாரிக்க பயன்படும் அரிசி, மளிகை, காய்கறிகள் விலை குறைந்துள்ளது. அப்படியிருக்கும் போது காரணமே இல்லாமல் உணவு பொருட்களின் விலையை உயர்த்தியது வாடிக்கையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், நீண்ட நாட்களாக கடைகளை மூடிவிட்டோம். இழந்த நஷ்டத்தை ஈடுகட்ட விலை உயர்வை தவிர வேறு வழியில்லை. மேலும் வாடிக்கையாளர்களும் குறைந்த அளவே வருகின்றனர்’ என்றனர்.

Related Stories: