சென்னையில் ‘டோர் டூ டோர்’ கொரோனா சோதனை திட்டம் இன்று முதல் அமலாகிறது

* 50 இடங்களில்  கபசுர குடிநீர்

* அமைச்சர்   விஜயபாஸ்கர்  தகவல்

சென்னை: கொரோனா தொற்று இருக்கிறதா என்பது தொடர்பாக வீடுகளில் நேரடியாக சென்று சோதனை செய்யும் திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையில் 50 இடங்களில் வாகனங்களில் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழக சுகாதாரத்துறை மற்றும் இந்திய ஹோமியோபதி மருத்துவத்துறை மற்றும் இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய குழு இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக நேற்று சென்னை வியாசர்பாடி சத்தியவாணி முத்து நகரில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு, கபசுரகுடிநீர்  வழங்கப்பட்டது.

தொடர்ந்து திருவல்லிக்கேணி பகுதிகளில் ஆய்வு ேமற்கொண்டு, அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பபட்டது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தேசிய தொற்று நோய் தடுப்பு இயக்குனர் மனோஜ் முரக்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கினர் இதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை 85 லட்சம் மக்கள் தொகை உள்ள ஒரு இடம். கொரோனாவை கட்டுப்படுத்தும் திட்டங்களில் ஒன்றாக கபசுரகுடிநீர்  பொட்டலங்கள் கொடுக்கப்பட்டு அதனை எப்படி பயன்படுத்த  வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.

சென்னையில் 50 இடங்களில் வாகனங்களில் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மேலும், இது குறித்து கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சென்னையில் நமக்கு சவாலாக தண்டையார்பேட்டை, திருவிக நகர், ராயபுரம், கோடம்பாக்கம் ஆகிய 4 பகுதிகள் தான் உள்ளது. நாளை (இன்று) முதல் சில  இடங்களில் மைக்ரோ பிளான் கொண்டு சோதனை செய்ய போகிறோம். நாளை (இன்று) முதல் வீடுகளுக்குச் நேரடியாக சென்று மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து அறிக்கையை அளிக்க உள்ளோம் எனவே, நாளை (இன்று) முதல் கொரோனா இல்லாத சென்னை எனும் திட்டத்தை அறிவிக்க உள்ளோம். அந்த திட்டத்தின் மூலம் சென்னை முழுவதும் இருக்க கூடிய பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து தொற்று இருந்தால் 10 நாட்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: