திருவள்ளூர் மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டல்

சென்னை: திருவள்ளூர் பெரும்பாக்கத்தில் 385 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டினார்.  திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கத்தில் உள்ள கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 8.68.22 ஹெக்டேர் நிலப்பரப்பில் 150 எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கையுடன் புதிய திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. இம்மருத்துவக் கல்லூரி நிறுவிட மத்திய அரசு 60 விழுக்காடு பங்களிப்பாக 195 கோடி ரூபாய் நிதியை வழங்கும், எஞ்சிய 190 கோடியே 63 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கும்.

இப்புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிறுவிட 385 கோடியே 63 லட்சம் ரூபாய் அனுமதித்து நிர்வாக ஒப்புதலையும், முதல்கட்டமாக 70 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்தும் 18.12.2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டடங்கள் 143 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மருத்துவமனைக் கட்டடங்கள் 165 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குடியிருப்பு மற்றும் விடுதிக் கட்டடங்கள் போன்றவை 77 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படும்.

Related Stories: