நெல்லை அறிவியல் மையம் சார்பில் முதல் முறையாக இணையதளத்தில் மியூசியம் தின விழா: வெளிநாட்டினரும் பங்கேற்று கலந்துரையாடல்

நெல்லை: நெல்லை மாவட்ட அறிவியல் மையம் சார்பில் முதல்முறையாக இணையதளம் மூலம் உலக மியூசிய தினம் கொண்டாடப்பட்டது. இதில் வெளிநாட்டினரும் பங்கேற்று கலந்துரையாடினர். கொரோனா தொற்று பரவல் காரணமாக நெல்லையில் உள்ள மாவட்ட அறிவியல் மையம் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன.இந்நிலையில் நேற்று உலக மியூசியம் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதை நெல்லை மாவட்ட அறிவியல் மையம் முதல்முறையாக இணையதளம் மூலம் கொண்டாடியது. இதுகுறித்து ஏற்கனவே முன்அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு விழா தொடங்கியபோது இணையதளத்தில் அறிவியல் மைய அலுவலர் குமார் வரவேற்று பேசினார்.தொடர்ந்து சார்ஜாவில் இருந்து அங்குள்ள “மெல்கா ஆர்காலஜிகள்” மையத்தின் கல்வி ஒருங்கிணைப்பாளரும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் நிர்மல் ராஜா பேசினார்.  அவர் பேசுகையில், கனிம பாறைகள் ஒவ்வொரு தட்டுகளாக உருவாக பல்லாயிரம் ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றன. இந்த கணிப்புகள் மூலம் உலக அளவிலான உயிரினங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது. பலகோடி ஆண்டுகளுக்கு முன் டைனோசர் பறக்கும் இனமாகவும் இருந்துள்ளது. தற்போதைய பறவையினங்கள் ஆதிகால டைனோசரின் வாரிசுகள் என எடுத்துக் கொள்ள முடியும். மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே இந்த நிகழ்வுகள் நடந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார்.

இவரைத் தொடர்ந்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பயோடெக்னாலஜி துறை தலைவர் பேராசிரியர் சுதாகர் மியூசியம் வரலாறு குறித்தும், ஆதிகால உயிரினங்கள் குறித்தும் பேசினார். தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து ஆராய்ச்சியாளர் கந்தகுமார் மற்றும் டெல்லி கல்வியாளர்கள் உள்ளிட்ட 34க்கும் மேற்பட்டவர்கள் இந்த இணையதள விழாவில் பங்கேற்று கலந்துரையாடினர். அறிவியல் மைய கல்வி அலுவலர் மாரி லெனின் நன்றி கூறினார்.

இதுகுறித்து அறிவியல் மைய அலுவலர் குமார், மற்றும்  மாரி லெனின் ஆகியோர் கூறுகையில், முதல் முறையாக இணையதளத்தில் நடத்தப்பட்ட இந்த விழா,  நெல்லை அறிவியல் மையத்தின் பெருமையை உலக அளவில் எடுத்துச் சென்றுள்ளது. இனிவரும் நாட்களிலும் இதுபோன்ற இணைய நிகழ்ச்சிகளை நடத்த திட்டம் உள்ளது. குறிப்பாக ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உலக அளவில் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் விவாதத்தை இணையதளத்தில் நடத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். மத்திய அரசு அனுமதி அளிக்கும் போது மீண்டும் பொதுமக்கள் அறிவியல் மையத்திற்கு வருவதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Stories: