மாநில அரசு மோசமான நிதி சிக்கலில் உள்ள சூழலில் கடன் பெற வசதியாக தேவையில்லாத கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று எழுதியுள்ள கடிதம்: கொரோனா  ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட மிகப் பெரிய வருவாய் வீழ்ச்சியின் நிமித்தம், கூடுதல் கடன் வாங்கும் வரம்பை ஒட்டுமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கும் மேலாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியது.

மாநில அரசுக்கு மிகப்பெரிய அளவிலான செலவுகள் உள்ளன. மாநில அரசுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் வரி வருவாயை வைத்து, திரும்ப செலுத்துவதற்கு ஏற்ற கடனை பெற வேண்டியதுள்ளது. எனவே கூடுதல் கடன் வாங்கும் தேவைகளுக்காக தேவையில்லாத கட்டுப்பாடுகளை வைப்பது காரணமில்லாததாகவே தெரிகிறது. மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து எழுவதற்கு முன்பு, ஒரு சீர்திருத்த திட்டத்தை வலுக்கட்டாயமாக திணிப்பது, கூட்டாட்சி தத்துவத்துக்கு உகந்தது அல்ல.

முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்த திட்டத்தை மாநிலங்களிடம் விரிவாக கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் நிலைமையின் அடிப்படையில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த சீர்திருத்தங்களை கொரோனாவுக்கான மத்திய சிறப்பு மானியத்துடன் இணைத்திருக்க வேண்டுமே தவிர, மாநில அரசுகள் பெறும் கூடுதல் கடனுடன் இணைக்க கூடாது. கூடுதல் கடன் வாங்கும் மாநிலங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது இதுவரை நடந்திராத ஒன்று. மின்சார சட்டத்தில் கொண்டு வர முன்மொழியப்பட்ட மாற்றங்களில் உள்ள பிரச்னைகள் பற்றி நான் ஏற்கனவே கருத்து கூறி இருக்கிறேன்.

விவசாயிகளுக்கு அளிக்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தும் யோசனையை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. சீர்த்திருத்த திட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மோசமான நிதி சிக்கல் இருக்கும் சூழலில் கடன் பெறுவதற்காக தேவையில்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, முக்கியமான செலவுகளில் தேவைப்படும் நிதியை மாநில அரசினால் பெற முடியாமல் போய்விடும். எனவே, சம்பந்தப்பட்ட வழிகாட்டு முறைகளில் தேவையான மாற்றங்களை கொண்டு வர அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: