அதி தீவிரத்திலிருந்து சூப்பர் புயலாக வலுப்பெற்றது ஆம்பன் : 5 மாநிலங்களில் கனமழைக்கு எச்சரிக்கை; திருச்சி, சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல் தீவிரமடைந்து சூப்பர் புயலாக வலுப்பெற்றுள்ளது என்றும் இந்த ஆம்பன் புயலால் 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உயர் உச்ச புயலாக(extremely severe cyclone) இருந்த ஆம்பன் புயல் தற்போது மிக கடும் புயலாக (super cyclone) மாறியுள்ளது. இது ஒடிஷா, மேற்கு வங்கம் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் 55-65 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அங்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பன் புயலால் ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகலயாவில் மே 21 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது போனறு ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,தேனி, நாமக்கல்,கரூர், திருச்சி,தென்காசி, பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 8 செமீ மழையும் திருச்சி மாவட்டம் பொன்னையார் அணையில் 7 செமீ மழையும் திருச்சி மாவட்டம் துவக்குடியில் 6 செமீ மழையும் பெய்துள்ளது.

Related Stories: