சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வட மாநில தொழிலாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகை: கொடுங்கையூரில் பரபரப்பு

பெரம்பூர்: சென்னை மற்றும் புறநகரில் தங்கி வேலை செய்து வந்த வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ஊரடங்கு உத்தரவால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வேலையிந்து, வறுமையில் தவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் தங்களிடம் இருந்த பணத்தை வைத்து ஓரளவுக்கு சமாளித்த தொழிலாளர்கள், தற்போது சாப்பாட்டிற்கு கூட வழியின்றி தவித்து வருகின்றனர்.  இவர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நடவடிக்கை இல்லாததால் பல இடங்களில் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடசென்னைக்கு உட்பட்ட கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்கேபி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களும் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப கோரி தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன், 20க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை கொடுங்கையூர் போலீசார், சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயிலில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.  இதுபற்றி அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் நேற்று கொடுங்கையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, எங்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள், என கோஷமிட்டனர். அப்போது, இன்ஸ்பெக்டர் ஆப்ரகாம் குரூஸ் மற்றும் போலீசார், ‘அனைவரின் விவரங்களையும் கொடுத்துவிட்டு செல்லுங்கள். அவற்றை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்து, அனுமதி பெற்று சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தனர். அதை தொடர்ந்து அனைவரும்  தங்களது முகவரி மற்றும் விவரங்களை எழுதி கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: