தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: 8 முக்கிய துறைகளில் தனியார் முதலீடுகளுக்கு அனுமதி...#IndiaforSale ஹெஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங்

டெல்லி: கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 3 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 52 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 17ம் தேதி இன்றுடன் முடிவடைகிறது.  மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட போதிலும், வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்தபாடில்லை. கடந்த சில நாட்களாக வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தி  இந்தியா உலகளவில் 11-வது இடத்தில் உள்ளது.

இதற்கிடையே, மே 17ம் தேதிக்கு பிறகான திட்டம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம்  பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, 5வது முறையாக கடந்த 12-ம் தேதி இரவு 8  மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரூ.20 லட்சம் கோடிக்கான சலுகையை அறிவிக்கிறேன். ரூ..20 லட்சம் கோடி நிவாரண நிதி குறித்து மத்திய நிதி அமைச்சகம் நாளை விரிவான  விளக்கம் அளிக்கும் என்றார்.

அதன்படி, அதற்கு மறுநாள் புதன் கிழமையில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு, இந்த பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை ‘தற்சார்பு இந்தியா திட்டம்’ என்ற பெயரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் படிப்படியாக அறிவித்து  வருகிறார். முதல் நாளில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான 15 அம்ச திட்டங்களையும், 2ம் நாளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள் பயன் பெறும் திட்டங்களையும், 3ம் நாளில் விவசாயம்,  கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான 11 அம்ச திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, 4ம் நாளான நேற்று, கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி (இஸ்ரோ), அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய 8 முக்கிய  துறைகளில் தனியார் முதலீடுகளை அனுமதிப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். இத்துறையில் போட்டி, வெளிப்படைத்தன்மை மற்றும் தனியார் பங்களிப்பை அதிகரிக்க பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்நிலையில், 8 முக்கிய துறைகள் தனியாரிடம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #IndiaforSale என்ற ஹெஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இணையவாசிகள், இந்த ஹெஷ்டேக் மூலம் தங்கள் எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.  இந்த ஹெஷ்டேக் தற்பொது டுவிட்டரில் இந்தியளவில் 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று 11 மணிக்கு அறிவிப்பு;

தினமும் மாலை 4 மணிக்கு, இந்த பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை ‘தற்சார்பு இந்தியா திட்டம்’ என்ற பெயரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் படிப்படியாக அறிவித்து வருகிறார். ஆனால், இன்று காலை 11 மணிக்கு  அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: