புயல் வலுவடைந்ததால் கடலில் கடும் சீற்றம் புவனேஸ்வரில் 20ம் தேதி கரையை கடக்கும்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  நேற்று இரவு 2 மணி அளவில் புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து, இந்த புயல் இன்று வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று 20ம் தேதி புவனேஸ்வரில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   வங்கக் கடலில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்தம் நேற்று தீவிர காற்றழுத்தமாக மாறியது. இதையடுத்து நேற்று மாலை அது மேலும் வலுவடைந்து மத்திய வங்கக் கடல் பகுதியில் இருந்து வட மேற்கு திசையில் நகரத் தொடங்கியுள்ளது. தற்போது அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றி உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதாக மாறியுள்ளதால் காற்றில் ஈரப்பதம் குறைந்து அதிக அளவில் வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டு இருந்த புயல் இன்று மாலைக்குள் தீவிரப் புயலாக வலுப்பெறும்.

  பின்னர் அந்த தீவிரப் புயல் இன்று வரை வடக்கு மற்றும் வட மேற்கு திசையிலும், 18ம் தேதி  முதல் வடக்கு மற்றும் வட கிழக்கு திசையிலும் நகரும். இந்த நிகழ்வின் காரணமாக வங்கக் கடலில் இன்று மணிக்கு 90 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் வீசும். அதிகபட்சமாக 110 கிமீ வேகத்தில் வீசும்.  18ம் தேதி மணிக்கு 120 கிமீ வேகத்தில் இருந்து 145 கிமீ வேகம் வரை சூறாவளிக் காற்று வீசும். 19ம் தேதி 165 கிமீ வேகம் முதல் 180 கிமீ வேகம் வரை காற்று  கடுமையாக வீசும். 20ம் தேதி வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 170 கிமீ வேகம் முதல் 190 கிமீ வேகம் வரை வீசும்.  இந்த தீவிரப் புயலின் நகர்வின் காரணமாக கடலில் கடும் சீற்றம் காணப்படும். மேலும், இந்த புயல் தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதியை நெருங்கி வருவது போல தோன்றினாலும், வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று 20ம் தேதி புவனேஸ்வர் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இதன் காரணமாக தமிழகத்தில் அதிக அளவில் வெயில் மற்றும் வெப்பம் காணப்படும். இன்று முதல் 20ம் தேதி வரை வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று பலமாக வீசும், கடலில் அதிக அளவில் சீற்றம் இருக்கும், சில இடங்களில் கடல் கொந்தளிப்பாக இருக்கும். அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர்.

 வங்கக் கடலில் புயல் மையம் கொண்டு இருப்பதாலும், அது வடக்கு வடமேற்கு திசையில் வளைந்து செல்லும் என்பதாலும், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில், கடலில் புயல் இருப்பதை தெரிவிக்கும் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது.

Related Stories: