திருவிக நகர் மண்டலத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்பட 40 பேருக்கு கொரோனா தொற்று

பெரம்பூர்: திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு கன்னிகாபுரம், தட்டாங்குளம், சாஸ்திரி நகர், அங்காள பரமேஸ்வரி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 9 பேருக்கு நேற்று கொரோனா தோற்று ஏற்பட்டது. ஓட்டேரியில் நுண்ணறிவு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பேசின் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த 50 வயது நபர் மற்றும் பேசின் பிரிட்ஜ் பகுதியில் தங்கி பணிபுரியும் 27 வயது ஆயுதப்படை காவலர் இவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல், ஓட்டேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில், பட்டாளம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள  கோயம்பேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி மகள், பனந்தோப்பு காலனியை சேர்ந்த ரயில்வே போலீஸ் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருவிக நகரில் 2 பேருக்கும், பெரவள்ளூர் பகுதியில் மாநகராட்சி ஊழியருக்கும், ஓட்டேரி காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வரும் செம்பியம் வஉசி நகரை சேர்ந்த 50 வயது நபருக்கும், தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் 2 பேருக்கும், அயனாவரம் பங்காரு தெருவை சேர்ந்த ஆயுதப்படை பெண் காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் திருவிக நகர் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 5 போலீசார், ஒரு ரயில்வே போலீஸ்காரர் உள்ளிட்ட 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம், நவநீதன் நகர், 1வது தெருவில் ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த முன்னாள் கவுன்சிலருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரது மனைவிக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு நேற்று உறுதியானது. இதேபோல், கவுரிவாக்கத்தை சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர், மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 6வது தெருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனரின் மகள் உட்பட குடும்பத்தினர் 13 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது.

இதில், ஆட்டோ ஓட்டுனரின் மகள் மேற்கு தாம்பரத்தில் உள்ள மருந்தகத்தில் வேலை செய்து வந்ததால், அவருடன் பணிபுரிந்த மேற்கு தாம்பரம், கஸ்தூரிபாய் நகர், சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்த 34 வயது பெண் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல், சிட்லபாக்கத்தில் 18 வயது பெண், பெருங்களத்தூரில், 53 வயது மூதாட்டி மற்றும் 61 வயது முதியவருக்கு தொற்று உறுதியானது.

* மயிலாப்பூர்  போக்குவரத்து தலைமை காவலருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது  குடும்ப உறுப்பினர்களை பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு நேற்று வைரஸ் தொற்று உறுதி  செய்யப்பட்டது.

மயக்க மருந்து நிபுணர் பாதிப்பு

கோட்டூர்புரம் ரஞ்சித் தெருவை சேர்ந்தவர் கேசவகுமார் (42). இவர், பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 12ம் தேதி காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்ததால் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர்.

Related Stories: