கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க இந்தியாவுக்கு ரூ.7,546 கோடி நிதி தொகுப்பு...உலக வங்கி அறிவிப்பு

டென்மார்க்: கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க இந்தியாவுக்கு ரூ.7,546 கோடி நிதி தொகுப்பை உலக வங்கி அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,970 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 2,649 பேர் உயிரிழந்த நிலையில், 27,920  பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. 3-ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 2 நாளே உள்ள நிலையில் மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கடந்த 51 நாள்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், தொழில்துறைகள் முடங்கியுள்ளன, பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடிக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் முதல் கட்டமாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறைகளுக்கு, 5.94 லட்சம் கோடிக்கான சலுகை திட்டங்களை அறிவித்தார். நேற்று 2வது கட்டமாக, 3.16 லட்சம் கோடிக்கான சலுகைகளை அறிவித்தார். இன்றும் திட்டங்களை அறிவிக்கவுள்ளார்.

இந்நிலையில், அரசின் திட்டங்களை செயல்படுத்த சமூக பாதுகாப்பு நிதி தொகுப்பை உலக வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு ரூ.7,546 கோடி நிதி தொகுப்பை உலக வங்கி அறிவித்துள்ளது. பொருளாதாரத்தை மீட்க இந்த நிதி தொகுப்பு உதவும் என்றும் கொரோனாவை எதிர்த்து போராடும் வகையில் வளரும் நாடுகளை வலுப்படுத்தவும், குறுகிய காலத்தில் பொருளாதார மற்றும் சமூக மீட்புக்காகவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Related Stories: