அரசு அறிவித்தப்படி 10-ம் வகுப்பு தேர்வு நடைபெறுமா?: பொதுதேர்வை தள்ளிவைக்க கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை...!

சென்னை: கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிய இருந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 3-ம் தேதி வரை   நீட்டிக்கப்பட்டது. இதனால் மே முதல் வாரத்தில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். எதிர்பாராத வகையில் மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு  அறிவித்தது.

இதனால், மீண்டும் தேர்வுகள் நடப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதற்கிடையே, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மார்ச் 19ம் தேதி தொடங்கிய நிலையில் அந்த பணியும் பாதியில் நின்றது. தற்போது பிளஸ் 2 விடைத்தாள்  திருத்தும் பணிகளையும் மே 27ம் தேதி தொடங்க அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பாக்கியுள்ள பிளஸ் 1  தேர்வுகள் நடத்த தற்போது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கும்.  பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வில் மார்ச் 26ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால்  அந்த தேர்வு  ஜூன் 2ம் தேதி நடத்தப்படும். அதேபோல 34 ஆயிரத்து 842 மாணவர்கள் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் 24ம் தேதியில் நடந்த தேர்வை எழுத முடியாமல் போனது. அதனால், அந்த மாணவர்களுக்கு  ஜூன் 4ம் தேதி  தேர்வு நடத்தப்படும்.

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 27ம் தேதி தொடங்கப்படும். தற்போது ஜூன் மாதம் நடக்க இருக்கும் தேர்வுகளில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்படும். பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களையும் அழைத்து வந்து திரும்ப வீட்டிற்கு கொண்டு சென்று விட பேருந்து வசதிகள் செய்யப்படும். அதே போன்று தேர்வு எழுத வரும் மாணவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும்.  இதனால் மாணவர்கள், பெற்றோர் அச்சம் கொள்ள தேவை இல்லை. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இருப்பினும், கொரோனா காலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது அவர்களின் மனநிலை பாதிக்கும் , அச்சப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தேர்வு ஒத்திவைக்க  கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, உயர்நீதிமன்ற 2  நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? இல்லை தள்ளி வைக்கப்படுமா? என்பது தெரியவரும்.

Related Stories: