திருவான்மியூர் தெப்பக்குளம் அருகே தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கும் பணிகள் தீவிரம்

துரைப்பாக்கம்: திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே மருந்தீஸ்வரர் காய்கறி மார்க்கெட் பல ஆண்டாக செயல்பட்டு வந்தது. திருவான்மியூர், அடையாறு, வேளச்சேரி, இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோர் இங்கு வந்து காய்கறி, பழங்கள் வாங்கி சென்று வந்தனர்.  இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வந்து, இங்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை தொடர்ந்து 23 வியாபாரிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதனால், இந்த மார்க்கெட்  மூடப்பட்டது. இதனால், இங்கு காய்கறி வாங்கி வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மருந்தீஸ்வரர் கோயில் தெப்ப குளத்தை சுற்றி சாலையோரத்தில் தற்காலிக கடைகள் அமைத்து, காய்கறி விற்பனை செய்ய மாநகராட்சியும், காவல்துறையும் அனுமதி அளித்தன. இதனையடுத்து, மருந்தீஸ்வரர் கோயில் தெப்ப குளத்தை சுற்றி 40 கடைகளும், ஏற்கனவே காய்கறி சந்தை செயல்பட்டு வந்த இடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் 40 கடைகளும் என மொத்தம் 80 கடைகள், 6 லட்சம் செலவில் அமைக்கும் பணி, மருந்தீஸ்வரர் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கடையும் சமூக இடைவெளியில் அமைக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் இப்பணி முழுமையாக முடிக்கப்பட்டு, கடைகள் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

10 ஆயிரம் அறைகள் தயார்

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் விமானம் மற்றும் ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். அதன்படி ரயில் மூலம் 1200க்கும் மேற்பட்டவர்கள் டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்தனர். நாளை மறுநாள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்னை வர உள்ளனர். இவர்களை தனிமைப்படுத்துவதற்காக சென்னையில் உள்ள விடுதிகளில் 10,000க்கும்  மேற்பட்ட அறைகள் தயார் நிலையில் உள்ளன. இங்கு மூன்று வேளை உணவு, கபசுர குடிநீர் வழங்கப்படும். இங்கு தங்குவதற்கு விருப்பம் இல்லாதவர்கள் மாநகராட்சி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். தொற்று இல்லாதவர்கள் 7 நாட்கள் அறைகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

Related Stories: