பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை தடுப்பது சுலபம் அல்ல: தமிழக முதல்வர் எடப்பாடி பேச்சு

சென்னை: பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பது சுலபம் அல்ல என்று முதல்வர் எடப்பாடி கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டம் தொடங்கியதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அரசு அறிவிக்கும் விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்தால் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முடியும். அதற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பை நல்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பது சுலபம் அல்ல.

விவசாய பணிகளுக்கு எந்த விதிவிலக்கும் இல்லாமல் தொய்வின்றி பணிகள் நடைபெறுகிறது. 100 நாள் பணியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் வழிமுறையை பின்பற்றி ஊரக பகுதியில் உள்ள தொழிற்சாலைகள்  திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. உணவு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. சிறு, குறு தொழில்கள்இயங்கி வருகின்றன. வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள், எங்களுக்கு மாதிரி அனுப்ப வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைவைத்தார்கள். அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள், வாய்ப்பு இருந்தால் அதற்கும் அனுமதி அளிக்கலாம் என்றுகூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும். எந்தளவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருகின்றார்களோ அந்தளவுக்கு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, பல்வேறு கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஊரடங்கினால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதை மீட்டெடுப்பதற்கு உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

நோய் பரவல் காரணமாக வெளிநாட்டில் இயங்கும் தொழில் நிறுவனங்கள் இன்றைக்கு வேறு நாட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு அந்த தொழிலை கொண்டு வருவதற்கும் உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா  நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. வைரஸ் தொற்று அதிகமான மாதிரிகள் எடுப்பதால், பரிசோதனை செய்யப்படுவதால் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இறப்பு சதவீதம் குறைந்த ஒரே மாநிலம் தமிழகம்தான். குணமடைந்தவர்கள் சதவீதம் 27ஆக இருக்கிறது. இறப்பு சதவீதம் 0.67 சதவீதமாக இருக்கிறது. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. மருத்துவ வல்லுனர்கள் தகவல்படி, இந்த கொரோனா வைரஸ் ஏறிய பிறகுதான் இறங்கும். அதுதான் தமிழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

 ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க  20 லட்சம் கோடிக்கான சலுகைகள் குறித்து பிரதமர் அறிவித்துள்ளார். குறிப்பாக விவசாயிகள், பொதுமக்கள், நடுத்தர குடும்பங்கள், தொழிற்சாலைகள் அனைத்துக்கும் புத்துயிர் கிடைப்பதற்கு இந்த நிதி பயன்படும். எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற செய்தி வந்தபிறகு, அதையும் தமிழகத்தில் பின்பற்றி செயல்படுத்தி நம்முடைய தொழில், விவசாயம் சிறக்க, பொதுமக்களுக்கு தேவையான நன்மைகள் கிடைக்க அரசு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.

‘குடிமராமத்து பணியை வேகமாக செயல்படுத்தவும்’

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டதால் அரசு அறிவித்த குடிமராமத்து திட்டத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து செய்ய வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் ஒரு ஏரியை எடுத்து குடிமராத்து திட்டத்தில் அந்த பணியை வேகமாக செயல்படுத்த வேண்டும். டெல்டா பகுதியில் இருக்கின்ற கால்வாயை தூர்வார தேவையான நிதி ஒதுக்கப்பட இருக்கிறது. அதையும் டெல்டா பாசனத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் பார்வையிட்டு வேகமாக தூர்வாரப்பட வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் டெல்டா பகுதியில் விரைவாக, வேகமாக கால்வாயை தூர்வாரும் பணியை செய்ய வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.

Related Stories: