தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு: குமரியில் 20 அடி பள்ளத்தில் சரிந்த தார்சாலை

திங்கள்சந்தை: நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடை அருகே திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இரு மாநிலங்களை இணைக்கும் சாலை என்பதாலும், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத்தலம் என்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இந்த சாலையை இணைக்கிறது. இதனால் லகுரக வாகனங்களும், ஏராளமான கனரக வாகனங்களும் சாலை வழியாக செல்கின்றன.

ஆகவே 24 மணிநேரமும் இந்த சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது. சாலையில் சுங்கான்கடை பகுதியில் ஐக்கனாகுளம் உள்ளது. குளத்தின் கரையோரம் தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போதும் பணி முழுமையடையவில்லை. சாலையில் இருந்து குளம் சுமார் 20 அடி பள்ளத்தில் உள்ளது. இந்த பகுதியில் கட்டப்பட்ட தடுப்பு சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சரிந்த சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் குளத்தில் தண்ணீர் பெருகி உள்ளது.

தடுப்பு சுவர் பணி முழுமையடையாததால் மழையால் சாலை ேசதமடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதில் தார்சாலையின் முக்கிய பகுதி குளத்துக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளது. எஞ்சிய சாலையும் பலமிழந்து காணப்படுவதால் சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. சாலையில் கனரக வாகனங்கள் சென்றால் அது குளத்திற்குள் கவிழும் அபாயம் உள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களே செல்கின்றன. இதனால் விபத்துகள் தவிர்க்கப்பட்டு வருகிறது.

என்றாலும் இப்பகுதி அபாயகரமாகவே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு மண் சரிவை சரி செய்து, சாலையை செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: