கொரோனா வைரசுக்கு சித்த மருந்து? நிபுணர் குழு பரிசீலிக்க வேண்டும் ,..மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் எனக் கூறப்படும் மூலிகை கலவையை நிபுணர் குழு பரிசீலித்து ஒரு மாத காலத்திற்குள்  முடிவை  தெரிவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கும்,

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் மற்றும் ஆயுஷ் மருத்துவர்கள் சங்கத் தலைவரான கே.எம்.செந்தமிழ்செல்வன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வசந்தகுமார், கொரோனாவுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்காத நிலையில், சித்தா, ஆயுர்வேதா,  யுனானி மருத்துவத்தில் இந்நோயை பரிபூரணமாக குணப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக்காட்ட தயாராக உள்ளனர். சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், லிங்கம், பாதரசம், செந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட 9 வகை மூலிகைகளை ஒன்றாக கலந்து மருந்தாக உட்கொண்டாலே கொரோனா உள்ளிட்ட எல்லா வகையான வைரஸ்களும் அழிக்கப்பட்டுவிடும் என்று வாதிட்டார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல், கொரோனாவை சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் குணப்படுத்த முடியுமா என்பதைக் கண்டறிய மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையி–்ல் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மூலிகையை பரிசீலிக்குமாறு மத்திய - மாநில அரசுகளுக்கு மனுதாரர் விண்ணப்பிக்க வேண்டும்.

 அந்த விண்ணப்பத்தை நிபுணர் குழு  பரிசீலித்து மூலிகை கலவை குறித்து விளக்கமளிக்க மனுதாரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.அந்த மருந்தை ஆய்வக பரிசோதனை செய்து ஒரு மாத காலத்திற்குள் அதன் முடிவை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: