மருத்துவமனையில் இடவசதி இல்லை எனக்கூறி கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேரை நடு ரோட்டில் தவிக்க விட்ட அதிகாரிகள்

* மனிதாபிமானமற்ற செயலால் மக்கள் அதிர்ச்சி

சென்னை: திருவொற்றியூர் மாநகராட்சி தங்கும் விடுதியில் இருந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து சென்று அதிகாரிகள், அங்கு இடவசதி இல்லை எனக்கூறி, நடுரோட்டில் இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவொற்றியூர் திருநகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் வீடற்றவர்களுக்கான தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு, தங்கியுள்ள 32 பேரில் 3 பேருக்கு சில தினங்களுக்கு முன்பாக காய்ச்சல் ஏற்பட்டதால், ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மூவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இவர்களுடன் தங்கியிருந்த அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 8 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் இவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு இடவசதி இல்லை எனக்கூறி, இவர்கள் 8 பேரையும் சிறப்பு வார்டில் அனுமதிக்காமல் சுமார் 3 மணி நேரம் கழித்து மீண்டும் ஆம்புலன்சில் கொண்டு வந்து தங்கும் விடுதி அருகே, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டனர். இதையடுத்து, அவர்கள் திருநகர் வழியாக நடந்தே தங்கும் விடுதிக்கு சென்றனர்.

இதை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது குறித்து திருவொற்றியூர், மண்டல அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.  இதையடுத்து, சுகாதார அதிகாரிகள் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து மேற்கண்ட 8 பேரையும் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே, அந்த விடுதியில் தங்கியிருந்த மேலும் 7 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் திருநகர் தெருவில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிகாரிகள் முதியவர்கள் விஷயத்தில் மனிதாபமின்றி நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினர்.

Related Stories: