பள்ளிக்கல்வித்துறையில்3 இணை இயக்குநர்கள் அதிரடியாக மாற்றம்

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் 3 இணை இயக்குநர்களை அதிரடியாக மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் உள்ள இணை இயக்குநர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணியாற்றும் இணை இயக்குநர் 3 பேர் நிர்வாக நலன் கருதி வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர். இதன்படி, சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வரும் அமுதவல்லி, மதுரை பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர்  மற்றும் சீர் மரபினர் நலத்துறையின் இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வரும் வை.குமார் அங்கிருந்து மாற்றப்பட்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராக (பாடத்திட்டம்) மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் பி.குமார், சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: