தபால் ஓட்டு எண்ணிக்கையில் விதி மீறில்: குஜராத் சட்டத்துறை அமைச்சர் பூபேந்திரசின் சுதஸ்மாவின் வெற்றி செல்லாது...அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

காந்திநகர்: கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜ 99 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் தனித்து 77  இடங்களிலும் கூட்டணியுடன் 80 இடங்களிலும் வென்றது.  இதற்கிடையே, டோல்கா தொகுதியில் போட்டியிட்டு 327 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக மூத்த தலைவர் பூபேந்திரசின் சுதஸ்மா, காங்கிரஸ் வேட்பாளர் அஷ்வின் ரதோடை வீழ்த்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து குஜராத் மாநில சட்டத்துறை  மற்றும் கல்வித்துறைஅமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

இருப்பினும், சட்டமன்ற தேர்தலில் 429 தபால் ஓட்டுக்களை, விதிகளை மீறி தேர்தல் அதிகாரி செல்லாது என்று அறிவித்ததாகக் கூறி, காங்கிரஸ் வேட்பாளர் அஷ்வின் ரதோட் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் அம்மாநில உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக, 78 முறை நடந்த விசாரணைகளில் தேர்தல் ஆணையம், அஷ்வின் ரதோட், சுதஸ்மா தரப்பில் ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், பாஜக வேட்பாளர் பூபேந்திரசின்  சுதஸ்மாவின் சட்டமன்ற தேர்தல் வெற்றி செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

பாஜக எஃகு கோட்டையாக உள்ள குஜராத்தில், ஆளும் கட்சிக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பு பின்னடைவாக கருதப்படுகிறது. சட்டத்துறை அமைச்சராக இருப்பவரின் தேர்தல் வெற்றியை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது  நாட்டு மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: