நடப்பாண்டு கோடை விழா நடக்குமா? ஏற்காட்டில் 10 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார்: கொரோனா ஊரடங்கால் கேள்விக்குறி

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் பூக்கள் பூத்து தயார் நிலையில் உள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக, நடப்பாண்டு கோடை விழா நடைபெறுமா?  என்ற கேள்வி எழுந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் முதன்மை சுற்றுலா தலமாக, ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் உள்ள ஏற்காட்டில், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் தோட்டம், ரோஜா தோட்டம், படகு இல்லம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், கிளியூர் நீர்வீழ்ச்சி, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் மலை என பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இதுதவிர காபி தோட்டம், மிளகு தோட்டம் மற்றும் மலைப்பாதையில் கண்டு ரசிக்க பல்வேறு காட்சி முனைகள் உள்ளன.

ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது அமைக்கப்படும் கண்கவர் மலர் கண்காட்சியை காண்பதற்காகவே, வெளிமாநிலத்திலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வருவார்கள். அத்துடன், நாய் கண்காட்சி, படகு போட்டி, ஆரோக்கிய குழந்தை போட்டி, கோலப்போட்டி, சமையல் போட்டி உள்பட பல்வேறு விதமான போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

அதன்படி நடப்பாண்டு மே மாதம் முதல் வாரத்தில் கோடை விழாவை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நடப்பாண்டு ஏற்காடு கோடை விழா நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு ஏற்காடு கோடை விழாவை சிறப்பாக நடத்த, தோட்டக்கலைத்துறை சார்பில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. விழாவில், மேரி கோல்டு, பிரஞ்ச் ேமரி கோல்டு, ஜினியா, காஸ்மாஸ், டேலியா, சால்வியா, ஆந்தூரியம், கிரிசோந்தியம் என பல்வேறு வகையிலான 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் தொட்டிகள் வைக்க, நாற்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. இவை தற்போது பூத்துக்குலுங்கும் கட்டத்திற்கு வந்துவிட்டன. அத்துடன், மலர் கண்காட்சி, காய்கறி, பூக்கள் மற்றும் பழங்களால் ஆன அலங்கார வளைவுகள், மலர்களால் ஆன சிற்பங்கள் அமைக்கவும் தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து வந்தது. எப்போது அறிவிப்பு வெளியானாலும், கோடை விழாவை சிறப்பாக நடத்த தோட்டக்கலைத்துறை தயாராக இருந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக நடப்பாண்டு கொரோனா தாக்கம், உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. கொரோனா பரவல் முழுமையாக நின்று, எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பது தெரியாத நிலை உள்ளது. இதனால் நடப்பாண்டு வழக்கம்போல் கோடை விழா நடத்தப்படுமா? அல்லது ஒத்திவைக்கப்பட்டு அடுத்த மாதம் நடத்தப்படுமா? அல்லது முழுவதுமாக ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதனால், கடந்த 3 மாதங்களாக மேற்கொண்ட அனைத்து ஏற்பாடுகளுக்கும் பலனில்லாமல் போனது. இது தோட்டக்கலைத்துறையினர் மட்டுமின்றி, பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. மேலும், கோடை விழா வியாபாரத்தை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஏற்காட்டில் உள்ள ஆட்டோ, கார் டிரைவர்கள், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கும் பெரும் பொருளாதார சரிவை கொரோனா வைரஸ் ஏற்படுத்திவிட்டது. எனினும், கோடை விழா குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என காத்திருக்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாம் சீசனில் நடத்த எதிர்பார்ப்பு

ஏற்காட்டில் நடப்பாண்டு கோடை விழா நடத்துவது கேள்விக்குறியாகியுள்ளது. அவ்வாறு விழா நடத்தினாலும், சுற்றுலா பயணிகள் வருகை குறைவதுடன், பெயரளவிற்கு மட்டுமே விழா இருக்கும். மேலும், வழக்கமான உற்சாகம், கொண்டாட்டம் இருப்பதும் கடினம் தான். ஏற்காட்டை பொறுத்தவரை, நவம்பர், டிசம்பர் மாதங்களில் இரண்டாவது சீசன் நன்றாக இருக்கும். ஏற்கனவே, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரில் இரண்டாவது சீசன் சமயத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறப்பு மலர்கண்காட்சி நடத்தப்பட்டது. அதேபோல், நடப்பாண்டு இரண்டாவது சீசனில் கோடை விழாவை நடத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: