கொரோனா பரவலுக்கு இனம், மதம் ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை; சமூக பரவல் நிலையை அடையவில்லை: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது; இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு குறைவுதான்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 4,213 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,152 ஆகவும், உயிரிழப்பு 2,206 ஆகவும் உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 1,559 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா மீட்பு விகிதம் 31.15% ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 20,917 பேர் குணமடைந்துள்ளனர். 44029 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 22,171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 8194 பேரும் தமிழ்நாட்டில் 7204 பேரும் டெல்லியிலும் 7200க்கும் அதிகமானோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று முதன்முதலில் உறுதியான கேரளாவில் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு இனம், மதம், பகுதி ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை. இது முன்னெச்சரிக்கைகள் இல்லாததால் பரவுகிறது. கொரோனா கட்டுப்பாட்டு முயற்சிகளில் கவனம் செலுத்துவது முக்கியம், கொரோனா இன்னும் சமூக பரவல் நிலையை அடையவில்லை. சில இடங்களில் அதிகப்பற்றமான கொரோனா தாக்குதல் ஏற்பட்டுள்ளது, அவை மத்திய சுகாதாரத்துறை கண்காணிப்பில் இருக்கின்றன.

Related Stories: