கொரோனாவால் திருவிழாக்கள் ரத்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் வெளிமாநில தொழிலாளர்கள் அவதி

திருப்புவனம்: கொரோனா ஊரடங்கால் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் வெளிமாநில தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக ராட்சத ராட்டினம், மரணக் கிணறு, ஜெயின்ட் வீல், ராட்டினம் என குழந்தைகளை மகிழ்விக்கும் பல்வேறு ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் உரிமையாளர்கள் கோவில்பட்டி, கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர்கள். ராட்டினத்தை பொருத்தி இயக்குவதற்காக பீகார், அஸ்ஸாம் மாநிலங்களை சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் 20 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த மார்ச் மாதம் ராட்டினங்கள் பொருத்தும் பணியில் இந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

பூமாரியம்மன் கோயில் திருவிழா முடிந்ததும், தாயமங்கலம் பங்குனி திருவிழா, மானாமதுரை சித்திரை திருவிழாக்களில் ராட்டினங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கால் அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டதால் ராட்டினங்களை இயக்க முடியவில்லை. ராட்டின உரிமையாளர்கள் சொந்த ஊரில் இருப்பதால் வெளிமாநில பணியாளர்கள் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுபற்றி வெளிமாநில தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘அஸ்ஸாம், பீகார் மாநிலங்களை சேர்ந்த 20 பேர் இருக்கிறோம். கடந்த 45 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பால், சொந்த ஊருக்கு  செல்ல முடியாமல் சாப்பாடின்றி தவித்தோம். வருவாய்த்துறை சார்பில்  எங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி கொடுத்து வருகின்றனர்’’ என்றனர்.     தாசில்தார் மூர்த்தி கூறுகையில், ‘‘கொரோனா ஊரடங்கால் ராட்டின தொழிலாளர்கள் இங்கு வந்து சிக்கி கொண்டனர். வருவாய்த்துறை சார்பில் அவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ராட்டின உரிமையாளர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்‘‘ என்றார்.

Related Stories: