அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து வாடகை லாரியில் கிளம்பிய 51 பீகார் தொழிலாளர்கள்: செங்குன்றத்தில் மடக்கிப்பிடித்தனர்

சென்னை:  சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 3,500-க்கும் மேற்பட்ட பெரிய கம்பெனிகள் மற்றும் சிறு, குறுதொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சென்னை புறநகர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே கொரோனா நோய்தொற்று பாதிப்பை தொடர்ந்து, வரும் 17-ம் தேதி வரை ஊரடங்கு தடை உத்தரவை மத்திய-மாநில அரசுகள் பிறப்பித்துள்ளது. இதையடுத்து, வடமாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை, உணவின்றி அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் தவித்து வருகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என கடந்த ஒன்றரை மாதங்களாக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த வினய்குமார் தலைமையில் 51 பேர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து பீகாருக்கு செல்ல முடிவெடுத்தனர். இதற்காக ராமநாதபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் முனியாண்டி மூலமாக 1 லட்சம் வாடகை பணத்தை கொடுத்து, அவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இந்த லாரி செங்குன்றம் பகுதியில் செல்லும்போது வாகன சோதனையில் போலீசார் லாரியை மடக்கிப்பிடித்தனர். இதைத் தொடர்ந்து அந்த லாரி மற்றும் சொந்த ஊருக்கு கிளம்பிய வடமாநிலத் தொழிலாளர்களுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு மீண்டும் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிரைவர் முனியாண்டியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: