சீர்குலைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் உயர்மட்ட குழு: தமிழக அரசு ஆணை

சென்னை: ஊரடங்கு காலத்தில் சீர்குலைந்த தமிழக அரசின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் உயர்மட்ட குழுவை அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் விவசாயம், தொழிற்சாலைகள், சுற்றுலா, கட்டுமானம், ரியல் எஸ்டேட், சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார சீர்குலைவை சமாளிக்கவும், சரி செய்யவும் இதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளவும் கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைப்பது மற்றும் ஏழைமக்களின் தேவையை பூர்த்தி செய்வது ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை மேற்கொள்வதும் அவசியமாகியுள்ளது.  எனவே, பொருளாதார பின்னடைவை சரிசெய்வதற்கான கொள்கை முடிவை எடுப்பதற்காக அரசுக்கு ஆலோசனை தர பொருளாதார நிபுணர்கள், திறமையான அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த குழு தொழிற்சாலைகள், வியாபாரிகள் சங்கங்கள், பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கும். இதற்கான உயர்மட்ட குழு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.

இந்த குழு பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி 3 மாதங்களுக்குள் அரசிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யும்.இ்ந்த குழுவில் முன்னாள் தலைமை செயலாளர் என்.நாராயணன், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பி.துரைசாமி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் என்.குமார், முருகப்பா குழும தலைவர் ஏ.வெள்ளையன், இண்டியா சிமெண்ட் துணைத் தலைவர் என்.சீனிவாசன், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன், இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் பத்மஜா சந்துரு, ஐஐடி பேராசிரியர் சுரேஷ்பாபு, யூனிசெப் ஒருங்கிணைப்பாளர் பினாகி சக்கரபர்த்தி மற்றும் தொழில்துறை, வேளாண்துறை, கால்நடை மற்றும் மீன்வளத்துறை, சுற்றுலா துறை உள்ளிட்ட துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 24 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: