கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 2 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்கள் போராட்டம்: கல் வீச்சில் போலீஸ் மண்டை உடைந்தது

வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேர் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி, இன்று போராட்டம் நடத்தினர். இதில் ஏற்பட்ட கல்வீச்சில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் மண்டை உடைந்தது. கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 1, 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு அணு உலைகளிலும் மின் உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் அணு மின் நிலைய வளாகத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டு 3, 4 என மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த 3 மற்றும் 4வது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகளில் ஓடிசா, பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் 4 ஆயிரத்து 500 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கு தளர்வு காரணமாக கட்டுமானப் பணிக்கு விலக்கு அளிக்கப்பட்டதால், ஏப்ரல் மாதம் கடைசியில் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 3 மற்றும் 4வது அணுஉலை கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கின.

இப் பணிகளில் 3 ஆயிரம் வடமாநிலத் தொழிலாளர்கள் உட்பட 5 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அச்சம் காரணமாக தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி கடந்த 4ம் தேதி அணுமின் நிலைய வளாகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி 3 ஆயிரத்து 341 பேர் பதிவு செய்தனர். ஆனால் பணியில்லாதவர்களை மட்டுமே சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணியில் இருப்பவர்களை அனுப்ப அந்த ஒப்பந்த நிறுவனம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேர் தங்களை தங்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி கூடங்குளம் அணுமின்நிலைய வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று அபாயம் இருப்பதால், தங்களை பாதுகாப்பாக அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்து கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜெகதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது வட மாநில தொழிலாளர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் சக்திவேல் என்ற போலீஸ் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

தொடர்ந்து போலீஸ் வாகனத்தின் மீதும் கல் வீசினர். காயமடைந்த போலீஸ்காரர் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நெல்லை மாவட்ட எஸ்பி ஓம் பிரகாஷ் மீனா, வள்ளியூர் ஏஎஸ்பி ஹரிகிரன் பிரசாத் தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வட மாநிலத் தொழிலாளர்களின் போராட்டத்தால் கூடங்குளத்தில் பரபரபபு ஏற்பட்டுள்ளது.

Related Stories: