தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை: ‘மது’ரை மண்டலத்தில் ஒரே நாளில் 45 கோடி ரூபாய்க்கு மது விற்பனை: விரும்பியது கிடைக்கவில்லையாம்; மதுப்பிரியர்கள் புலம்பல்

மதுரை:  ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும், மதுரை மண்டலத்தில்  ரூ.45 கோடிக்கு மது வகைகள் அமோகமாக விற்பனையானது. ஆனாலும், விரும்பிய சரக்கு கிடைக்கவில்லையே என மதுப்பிரியர்கள் புலம்பலும் எதிரொலித்தது. மதுரை டாஸ்மாக் மண்டலத்தில் மதுரை (வடக்கு), மதுரை (தெற்கு), தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் என  மொத்த 10 மாவட்டங்கள் உள்ளன. 10 மாவட்டங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் மதுரை மாவட்டத்தில் நகரில் (வடக்கு மாவட்டம்) 113 கடைகள், புறநகரில் (தெற்கு மாவட்டம்) 152 கடைகள் என மொத்தம்  என 265 கடைகள் உள்னன. நாட்டையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. சரக்கு விற்பனை அடியோடு முடங்கியதால், மதுப்பிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

அரசு உத்தரவை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நேற்று  முன்தினம்  (மே 7) கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில், காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டன. மாலை 5 மணி வரை  சரக்குகள் அமோகமாக விற்பனையானது. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று, சரக்குகளை வாங்கிச் சென்றனர். தாங்கள் விரும்பிய சரக்கு கிடைக்கவில்லை என பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.  மதுரை மாவட்டத்தில் நகரில் மட்டும் நேற்று முன்தினம் ஒரே  நாளில் மட்டும் ரூ.4 கோடியே 24 லட்சத்து 27 ஆயிரத்து 700க்கு விற்பனையானது. நகரில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஒரு நாளைக்கு ரூ.2 கோடி வரை தான் விற்பனையாகும். ஆனால், 44 நாட்கள் அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால், இரு மடங்கு சரக்கு விற்பனையானது.

மதியத்திற்குள் கடைகளில் சரக்குகள் விற்றுத் தீர்ந்து விட்டன. இதே போல், புறநகரில் ரூ.4 கோடியே 55  லட்சத்து 80 ஆயிரத்து 175க்கு விற்பனையானது. வழக்கமான விற்பனையை விட இருமடங்கு சரக்குகள் விற்பனையாகி உள்ளன. மதுரை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு ஆகிய 2 மாவட்டங்களிலும் மொத்தம் ரூ.8 கோடியே 80  லட்சத்து  7 ஆயிரத்து 875க்கு சரக்குகள் விற்பனையாகி உள்ளன. அதே நேரத்தில் மதுரை மண்டலத்திற்குட்பட்ட 10 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.45 கோடிக்கு சரக்குகள் விற்பனையாகி உள்ளது.இதுகுறித்து பணியாளர்கள் கூறும்போது, “மதுரை மாவட்டத்தில் இதுவரை இவ்வளவு பெரிய தொகைக்கு ஒரே நாளில் சரக்குகள் விற்பனையானது இல்லை. இது ஒரு பெரிய சாதனை. ஒரே நாளில் சரக்குகள் விற்பனையாகி விட்டதால், குடோனில் இருந்து சரக்குகள் வந்த பின்பு விற்பனை செய்தோம். இன்று (நேற்று) வழக்கம் போல் விற்பனையானது” என்றனர்.

கோடிகளில் ‘டாப் 5’

விருதுநகர் மாவட்டத்தில் முதல் நாள் விற்பனை ரூ.5.62 கோடி. திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.5.50 கோடி, சிவகங்கை மாவட்டத்தில் ரூ.3.98 கோடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.3.25 கோடி,  தேனி மாவட்டத்தில் ரூ.2.16 கோடி என ஒரேநாளில் மது விற்பனையானது.

Related Stories: