ஒன்றரை மாதத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை: ஒன்றரை மாத ஊரடங்கு உத்தரவால் முடக்கப்பட்ட சிவகங்கை மாவட்டம் சிறிது, சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் மே 3 வரையும் பின்னர் மே 17 வரையும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மே 3 வரை காலை ஆறு மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மட்டும் மளிகை, காய்கறி, பால், மெடிக்கல்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. தற்போது மாலை 5 மணி வரை அத்தியாவசிய கடைகள், தனிக்கடைகள், நிறுவனங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் செய்யும் அரசு அலுவலகங்கள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட தொடங்கியுள்ளன. காலை முதல் மாலை வரை நகரங்களின் முக்கிய பகுதிகள், சாலைகளில் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இயல்பு நிலையில் உள்ளது.

ஹோட்டல்களில் பார்சல்கள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. டீக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள், குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள், விவசாயப் பணிகள், நூறுநாள் வேலை பணிகள் உள்ளிட்டவைகள் வழக்கம்போல் நடந்து வருகின்றன. கடந்த ஒன்றரை மாதங்களாக முடக்கப்பட்டிருந்த மாவட்டம் சிறிது, சிறிதாக மீண்டும் இ,யல்பு நிலைக்கு திரும்புகிறது. வீடுகளுக்குள் முடங்கியிருந்த மக்களுக்கு ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது மிகப்பெரும் ஆறுதலாக உள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: ஒன்றரை மாதமாக வீடுகளுக்குள் முடங்கியிருந்த நிலையில் தற்போது கொஞ்சம் நிம்மதியாக உள்ளது. வேலைவாய்ப்பில்லாமல் முடங்கியிருந்த நிலையில் கடும் பாதிப்பை சந்தித்தோம். ஏராளமான வேலைகள் செய்ய முடியாமல் கிடப்பில் இருந்ததை தற்போது முடித்து வருகிறோம். கொரோனா பரவல் இல்லாமல் இதே நிலை தொடர வேண்டும். மீண்டும் ஒரு முறை ஊரடங்கு என்பதை நினைத்தே பார்க்க முடியவில்லை என்றனர்.

Related Stories: