இந்த திட்டம் நமக்கு தோணாமப்போச்சே... மாம்பழம்மா... மாம்பழம்... ஆர்டர் குடுத்தா வரும் பழம்...

* தபால்துறை உதவியுடன் தெலங்கானா அரசு நேரடி விற்பனை

* குறைந்த விலையால் இணையதளமே முடங்கும் அளவுக்கு சேல்ஸ்

* சேலம் மண்டலம் தான் மாம்பழத்திற்கு பிரபலம். இங்கு ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம்  சுமார் ரூ.750 கோடி வருமானம் வரும்.

* தெற்காசிய நாடுகள், அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் சேலம் மண்டல மாம்பழங்களுக்கு அதிக கிராக்கி.

* கொரோனாவால் இந்த ஆண்டு பெங்களூருக்கு மட்டுமே சப்ளை செய்ய முடிந்திருக்கிறது. கன்னத்தில் கைவைத்தபடி கவலையில் இருக்கிறார்கள் விவசாயிகள்.

‘‘சார் போஸ்ட்...’’ தபால்காரரின் இந்த குரலை கேட்டு பல நாட்கள் ஆகியிருக்கும். இ்ப்போது, முக்கிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தெலங்கானாவில், ‘‘சார் மாம்பழம்...’’ என்ற குரல்தான் பேமசாக உள்ளது. ஆம் தெலங்கானாவில் தபால் துறை உதவியுடன், அம்மாநில தோட்டக்கலைத்துறை குறைந்த விலையில், பல்வேறு ரக மாம்பழங்களை, விவசாயிகளிடம் இருந்து பெற்று, பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறது. குறைந்த விலையில் விற்கப்படும் இந்த மாம்பழங்களை வாங்க பொதுமக்கள் போட்டி போடுவதால், தினமும் இணையதளமே முடங்கிவிடும் அளவுக்கு ஆகிவிடுகிறது.

இதனால், இனி விற்பனை இத்தனாம் தேதி, இத்தனை மணிக்கு என்று செல்போன்களை விற்பனை செய்யும் தனியார்களை போல அறிவிப்பை போடும் அளவுக்கு தோட்டக்கலையின் விற்பனை சக்கைப்போடு போடுகிறது. தெலங்கானா மாநில தோட்டக்கலைத்துறை சார்பில் தபால் துறையின் மூலம் பொதுமக்களின் வீடுகள் தேடி மாம்பழங்கள் விற்பனை செய்யும் திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து தோட்டக்கலைத் துறை செயலாளர் ஜனார்த்தன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஊரடங்கு நேரத்தில் வீடுகளிலேயே முடங்கியுள்ள பொதுமக்களுக்கு தாங்கள் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் உள்ள விவசாயிகளுக்கு பாலமாக இருக்கும் விதமாக தோட்டக்கலைத்துறை தபால் துறையுடன் இணைந்து பொதுமக்களின் வீடு தேடி சுவையான  மாம்பழங்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அவ்வாறு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  இதற்காக தோட்டக்கலைத் துறையின் இணையதள முகவரி www.tfresh.org யில் பொதுமக்கள் ஆர்டர் கொடுக்கலாம். மேலும் தொலைபேசி எண் 799-772-4925 or 799-772-4944 மூலம் தொடர்பு கொண்டு ஆர்டர் வழங்கலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வார நாட்களில் நேரடியாக வீடுகளுக்கு மாம்பழங்கள் அஞ்சல் துறையின் சார்பில் டெலிவரி செய்யப்படுகிறது. இதுவரை 76.1 லட்சம் மதிப்புள்ள மாம்பழங்கள் ஆர்டர்களைப் பெற்றுள்ளது. அதிக அளவில் பங்கனபள்ளி மாம்பழமும் இதர மாம்பழங்களும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாகர் கர்னூல், ஜாகித்யால், மஞ்சேரியலா, பத்ராச்சலம், சத்துப்பள்ளி மற்றும் சித்திப்பேட்டையில் ஒரு நாளைக்கு சராசரியாக 10 முதல் 15 டன் மாம்பழங்கள் வரை சந்தைக்கு வந்தபடி உள்ளது.

அவ்வாறு வரக்கூடிய மாம்பழங்களை 5 கிலோ பாக்கெட்டுகளாக 350 முதல் 450 வரை டோர் டெலிவரி செய்கிறோம். கிலோமீட்டர் அளவை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே  50 டன் மாம்பழங்கள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் ஏராளமான மாம்பழ விவசாயிகள் உள்ளனர். அவர்களின் மாம்பழங்கள் விற்பனை ஆகாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர். தெலங்கானா மாநில அரசு விவசாயிகளுக்கு உதவுவதுபோல், தமிழகத்திலும் உதவினால் ஏராளமான விவசாயிகள் பலனடைவார்கள்.

Related Stories: