திருமழிசை மார்க்கெட் செயல்படுவது எப்போது? முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை: இன்று மாலை நேரில் பார்வையிடுகிறார்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதையொட்டி, தற்காலிகமாக மொத்த காய்கறி மார்க்கெட் திருமழிசையில் செயல்படுவது எப்போது என்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இன்று மாலை முதல்வரும், துணை முதல்வரும் திருமழிசைக்கு நேரில் சென்று ஆய்வு செய்கின்றனர்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ கோயம்பேடு மார்க்கெட் முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இதையடுத்து கடந்த 5ம் தேதி முதல் கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட்டை தமிழக அரசு அதிரடியாக மூட உத்தரவிட்டது. பூந்தமல்லி அருகேயுள்ள திருமழிசையில் தற்காலிகமாக மொத்த காய்கறி மார்க்கெட் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த பகுதியில் எங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தால்தான் அங்கு சென்று வியாபாரம் செய்வோம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

 அங்கு தற்காலிக ஷெட் அமைக்கும் பணி கடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது. ஆனாலும் அங்கு காய்கறி வியாபாரம் இன்னும் நடைபெறவில்லை. இதனால் சென்னையில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைக்கப்பட்டு வருவது தொடர்பாக அவசர ஆலோசன கூட்டம் நடந்தது. இதில் தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இன்னும் ஒன்று, இரண்டு நாட்களில் திருமழிசையில் பணிகளை முடித்து, 200 மொத்த வியாபார கடைகளை மட்டும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் பொதுமக்கள் திருமழிசை சென்று காய்கறி வாங்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று (9ம் தேதி) மாலை 4.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைப்பதற்காக நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளனர். பார்வையிட்ட பிறகு, மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Related Stories: