குடி போதையால் விபரீதம் தமிழகத்தில் ஒரே நாளில் 15 கொலைகள்: கடந்த மார்ச் 24ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் குற்றச் செயல்கள் அடியோடு குறைந்தன.

* நேறறு முன்தினம் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 4 பேர் கொலை செய்யப்பட்டனர்.

* 2வது நாளாக நேற்று போதை ஆசாமிகளால் 15 பேர் கொலையுண்டனர்.

சென்னை: மதுக்கடைகள் திறந்த 2-வது நாளில் போலி டாக்டர், விவசாயி உள்பட 15 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 45 நாளுக்குபின் மதுக்கடைகள் திறந்ததால் சட்டம்-ஒழுங்கு மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 6ம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மதுக்கடைகள் மூடப்பட்டதால், செயின் பறிப்பு, வழிப்பறி, கொலை, கொலைமிரட்டல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் குறைந்திருந்தன.

மேலும், கோடிக்கணக்கான குடும்பபெண்கள் போதையில் கணவன் செய்யும் டார்ச்சர் இல்லாததால் மனநிம்மதியுடன் இருந்தனர். இந்தநிலையில், முதல்வர் பழனிசாமி அறிவிப்பின்படி நேற்றுமுன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

முதல்நாளிலேயே போதை ஆசாமிகளால் 4 கொலைகள் நடந்தன. 2-வது நாளான நேற்று மேலும் 15 கொலைகள் நடந்துள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு: போலி டாக்டர்: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மாடுவிழுந்தான் பாறையை சேர்ந்தவர் சரவணன் (40). இவரது மனைவி சுகன்யா (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சரவணன் நச்சலூரில் ரத்த பரிசோதனை நிலையம் வைத்துள்ளார். கடந்த மாதம், போலி டாக்டர் என்று கைதாகி சமீபத்தில் முன்ஜாமீனில் வெளியே வந்திருந்தார். நேற்றுமுன்தினம் இரவு உறவினர்கள் 2 பேருடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் சரவணன் வெட்டி கொலை செய்யப்பட்டார். உறவினர்களான முருகானந்தம் (28), செல்லமுத்து (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மதுக்கடை விவாதத்தால் விவசாயி கொலை:  விழுப்புரம் மாவட்டம் தளவானூரை சேர்ந்தவர் பழனிவேல் (52). விவசாயி. இவர் தனது உறவினர்கள் 3 பேருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். போதையில் 4 பேருக்கும் டாஸ்மாக் கடை திறப்பு தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. இதில் பழனிவேலை மூவரும் மதுபாட்டில் மற்றும்

கத்தியால் குத்தி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பழனிவேல் இறந்தார்.தஞ்சை ரவுடி: தஞ்சை பூமால்ராவுத்தர் கோயில் தெருவை சேர்ந்தவர் கனி என்ற அருண்குமார் (34). ரவுடியான இவருக்கு 2 மனைவிகள், 5 குழந்தைகள் உள்ளனர். கனி மீது காவல் நிலையங்களில் பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர், நேற்றுமுன்தினம் நண்பர் பிச்சாண்டி வீட்டில் கதிர்வேல், முத்து ஆகியோருடன் இரவு 10 மணியளவில் மது அருந்தினார்.

போதை தலைக்கு ஏறியதும் கனிக்கும், மற்ற 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், நண்பர் பிச்சாண்டி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து அரிவாளால் கனியை வெட்டி கொன்றனர்.  பெயிண்டர்: கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் என்கிற புலிக்குட்டி (34). பெயிண்டரான இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் தந்தைக்கும் இடையே கடந்த 3 மாதத்துக்கு முன்பு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.  நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் சரவணன், தனது தாய் சுசிலா மற்றும் நண்பர்கள் 3 பேருடன் பாஸ்கர் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த பாஸ்கரை உருட்டுக்கட்டை மற்றும் அரிவாளால் தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் பாஸ்கர் இறந்தார்.

மயிலாடுதுறை கூறைநாடு கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயில் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வன் (34). இரும்பு கடை தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஆற்றங்கரைத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(24) மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோரிடையே தெருவில் குடிபோதையில் தகராறு நடந்துள்ளது. இதனை தட்டி கேட்ட மாரிசெல்வன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார் (20). இவர், கோவை கணபதி பூம்புகார் நகரில் அறை எடுத்து தங்கி, டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடன், மெக்கானிக் மணிகண்டன் (22) என்பவரும் தங்கியிருந்தார். 2 பேருக்கும் நேற்று முன்தினம்இரவில் போதையில் தகராறு ஏற்பட்டது. அதிகாலையில்  மணிகண்டன், தம்பிள்ஸ் உடற்பயிற்சி கருவியை எடுத்து சிவக்குமாரை தாக்கினார். இதில், அவர் இறந்தார்.

நெல்லை, தூத்துக்குடியில் 4 கொலைகள்: நெல்லை தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (35). கூலி தொழிலாளியான  இவரை போலீஸ் இன்பார்மர் என்று சந்தேகித்து அதே ஊரை சேர்ந்த போதை ஆசாமிகள் 2 பேர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். கூடங்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் சொத்தை தன் பெயருக்கு எழுதி வைக்காத தயார் ஜெயமணி (60) என்பவரை அவரது மகன் ராஜன் (30) குடிபோதையில் வெட்டிக் கொலை செய்தார். இதேபோல், அம்பை அருகேயுள்ள பிரம்மதேசத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜேந்திரன்(33) என்பவரை கோயில் வரி வசூல் தொடர்பாக குடிபோதையில் 2 பேர் அரிவாளால் வெட்டி கொன்றனர்.

தூத்துக்குடி அண்ணாநகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (47). கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் அருகே மின்வயர் அறுந்து கிடந்துள்ளது. இதுகுறித்து மின்வாரியத்திற்கு தெரிவிக்க பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜாஹிரிடம் மின்வாரிய அலுவலக எண்ணை கேட்டுள்ளார். அப்போது சரவணன் மதுபோதையில் இருந்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜாஹிர், அவரது மனைவி, நண்பர் அருண் மற்றும் சிலர் சேர்ந்து சரவணனை தாக்கினர். அந்த காயத்துடன் வீட்டுக்கு சென்ற சரவணன் நள்ளிரவில் இறந்தார். ரவுடி, கூலித்தொழிலாளி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கே.காமாட்சிபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குணசேகரன் (45) என்பவர் உறவினர் பாண்டி (35) என்பவராலும், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்த சேக் (எ) ஜெயக்குமார்(25) என்ற பிரபல ரவுடி ஆனந்த்(26) மற்றும் அவரது நண்பர்களாலும் வெட்டிக்கொல்லப்பட்டார்.

 ராணிப்பேட்டை மகாவீரர் நகரை சேர்ந்தவர் போஸ்(24). தொழிலாளியான இவருக்கும் போதையில் இருந்த ராணிப்பேட்டை ராஜசேகர், அக்ரம் உள்ளிட்ட 6 பேருக்கும் நேற்று முன்தினம் மாலை  தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 6 பேரும் தாக்கியதில் போஸ் இறந்தார்.திருவாரூர் அருகே மாவூரை சேர்ந்த ராஜ்குமார் (23). இவர், தனது சித்தப்பாக்கள் பாஸ்கரன் (55), முருகேசன் (45) ஆகியோருடன் நேற்றுமுன்தினம் மது அருந்தினார். போதையில் ஏற்பட்ட தகராறில்  ராஜ்குமாரை பாஸ்கரன் அடித்தே கொன்றார். நாகப்பட்டினத்தில், கூலி கேட்டு போதையில்  தகராறு செய்த கட்டிட தொழிலாளி கஜேந்திரன் அடித்து கொலை செய்யப்பட்டார். டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்த 2-வது நாளில் 15 கொலைகள் அரங்கேறியுள்ளது.

Related Stories: