தாம்பரம், மாடம்பாக்கம் பகுதியில் காய்கறி வியாபாரிகள் 3 பேருக்கு கொரோனா

தாம்பரம்: ஊரடங்கு உத்தரவு காரணமாக தாம்பரம் காந்தி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக மார்க்கெட் செயல்படுகிறது.

பழைய ஸ்டேட் பாங்க் காலனி லிங்க் சாலையை சேர்ந்த 41 வயது வியாபாரி ஒருவர் கோயம்பேடு மார்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்தார். தற்போது, கோயம்பேடு மார்கெட் வியாபாரிகள் உட்பட அங்கு சென்றுவந்த வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நடத்திய பரிசோதனையில் இவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதேபோல், கோயம்பேடு மார்கெட்டில் காய்கறி வாங்கி வந்து மாடம்பாக்கம் ஏ.எல்.எஸ். நகரில் வைத்து விற்பனை செய்த பெரிய பாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த அண்ணன், தம்பி இருவருக்கு நேற்று கொரோனா உறுதியானது.

இதையடுத்து தாம்பரம் தற்காலிக மார்கெட்டில் கடை அமைத்துள்ள வியாபாரிகள், மாடம்பாக்கம், பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புழல்:  புழல் அடுத்த  எம்ஜிஆர் நகர் 4வது தெருவை சேர்ந்த 71 வயது முதியவர், உடல் நிலை பாதிக்கப்பட்டதால், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு வார்டில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, இவரது வீடு அமைந்துள்ள பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பூர்: செம்பியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சின்னசாமி தெருவில் 27 நிறைமாத கர்ப்பிணி, பேசின் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த ஆசிர்வாதபுரம் மற்றும் சிவராஜபுரம் பகுதிகளை சேர்ந்த 2 பேர், ஓட்டேரியை சேர்ந்த 9 பேர், வி.வி.கோயில் தெருவில் 2 பேர், இஎஸ்ஐ குடியிருப்பை சேர்ந்த 2 பேர், புதிய வாழைமா நகரை சேர்ந்த ஒருவர், செல்லப்பா தெருவை சேர்ந்த ஒருவர், தேவராஜ் தெருவை சேர்ந்த ஒருவர், புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த 2 பேர், பி.கே காலனியை சேர்ந்த 2 பேர் என 39 பேருக்கு நேற்று திருவிக நகர் மண்டலத்தில் கொரோனா  உறுதிப்படுத்தப்பட்டது.

கொரோனாவுக்கு பெண் பலி

கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் 48 வயது பெண் நீரழிவு நோய் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோது, கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவரது உடலை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பெசன்ட்நகர் சுடுகாட்டில் தகனம் செய்தனர்.

Related Stories: