தமிழகத்தில் இன்று மதுபானக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு: திமுக கூட்டணிக் கட்சி அழைப்பை ஏற்று வீட்டின் முன் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்

சென்னை: டாஸ்மாக்கை திறக்கும் மாநில அரசை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் கருப்பு அட்டையுடன் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் வீட்டில் கருப்புகொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழகத்தில் மற்ற பகுதிகளில் இன்று முதல் மதுபானக்கடைகள் திறக்கப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை: திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசை கண்டிக்கும் வகையிலும் மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும் மே 7-ம் தேதி ஒருநாள் மட்டும் கருப்புச் சின்னம் அணிவது என்றும் அன்று காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் ஐந்து பேருக்கு அதிகமாகாமல் பதினைந்து நிமிடங்கள் நின்று, “கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டிக்கிறோம்” என முழக்கமிட்டுக் கலைவதென்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அதன் கூட்டணிக் கட்சித் தலைவவர்கள் கலந்து பேசி முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அலட்சியமும், ஆணவமும் கொண்ட தமிழக அரசுக்கு, கொரோனா நோய் தொற்று தமிழகத்தில் ஏற்படுத்தி வரும் பெரும் பாதிப்பை உணர்திடும் வகையில் தமிழக மக்கள் அனைவரும் கருப்புச் சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டும். தமிழக மக்கள் அணியப் போகும் கருப்புச் சின்னம், அதிமுக அரசின் கண்களைத் திறக்கட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மதுக்கடைகள் திறப்பதற்கு எதிப்பு தெரிவிக்கும் விதமாக, பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன் கருப்பு கொடிகளை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இதற்கிடையே, மதுக்கடை திறப்பதற்கு எதிப்பு தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில் #குடிகெடுக்கும்_எடப்பாடி என்று பதிவிட்டு வருகின்றனர். தற்போது, #குடிகெடுக்கும்_எடப்பாடி என்ற ஹெஸ்டேக் டுவிட்டரில் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது.

Related Stories: